செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!… post thumbnail image
பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான பிரேசில் அணி 5 முறை உலக கோப்பை வென்றும் சாதனை படைத்து இருக்கிறது.

உள்ளூரில் போட்டி நடப்பதால் இந்த முறை நமது அணி தான் உலக கோப்பையை உச்சி முகரும் என்று எதிர்பார்த்த பிரேசில் ரசிகர்களுக்கு நேற்று முன்தினம் பேரிடி விழுந்தது. ஹிட்லரை விட அதிவேகமாகவும், தடாலடியாகவும் செயல்பட்ட ஜெர்மனி 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித்தள்ளி விட்டது. 1950–ம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை போட்டியை நடத்திய போது பிரேசில் அணி 1–2 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் கோப்பையை கோட்டை விட்டது. இப்போது மறுபடியும் சொந்த ஊரில் மரண இடி விழுந்திருக்கிறது.

தோல்வியை ஜீரணிக்க முடியாமல் பிரேசில் ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களை வசைபாடி வருகிறார்கள். போதாக்குறைக்கு அந்த நாட்டு பத்திரிகைகளும் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கின்றன. ‘வெட்கக்கேடான தோல்வி’ என்றும், ‘அவமானம், அவமானம்’ என்றும் பல பத்திரிகைகள் தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஜெர்மனி–பிரேசில்’ ஆட்டத்தை சீனியர் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் போல் இருந்தது என்று விளையாட்டு வல்லுனர்கள் கிண்டலடித்துள்ளனர். கால்பந்து அரங்கின் இந்த கறுப்பு தினத்தை மறக்க பிரேசில் நாட்டவர்களுக்கு நிச்சயம் நீண்ட நாள் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி இந்த தோல்வியின் மூலம் பிரேசில் இழந்த சில அரிய பெருமைகள் வருமாறு:–

* நூற்றாண்டு கால பிரேசில் கால்பந்து வரலாற்றில் அந்த அணி சந்தித்த கேவலமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1920–ம் ஆண்டு கோபாஅமெரிக்கா போட்டியில் உருகுவேயிடம் 0–6 என்ற கணக்கில் மண்ணை கவ்வியதே மோசமான தோல்வியாக இருந்தது.

* சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். கடைசியாக 2002–ம் ஆண்டு நட்புறவு சர்வதேச போட்டியில் பராகுவேயிடம் 0–1 என்ற கணக்கில் தோற்றிருந்தது.

* உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலுக்கு கிடைத்த கசப்பு மருந்தும் தான். இதற்கு முன்பு 1998–ம்ஆண்டு உலக கோப்பையில் பிரான்சுக்கு எதிராக 0–3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்ததே மோசமான தோல்வியாக வர்ணிக்கப்பட்டது.

* 1938–ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு பிரேசில் அணி அரை இறுதியுடன் அஸ்தமித்து போவது இதுவே முதல் முறை.

* ஒரு போட்டியில் பிரேசில் அணி 7 கோல்களுக்கு மேல் தாரை வார்த்திருப்பது இது 2–வது தடவையாகும். முந்தைய ஒரே நிகழ்வாக 1934–ம் ஆண்டு யூகோஸ்லாவியாவுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் பிரேசில் 4–8 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தது.

* உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் பிரேசில் 5 கோல்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருப்பது இது 2–வது முறையாகும். 1938–ம் ஆண்டு போலந்துக்கு எதிராக கூடுதல் நேரத்தில் பிரேசில் 6–5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

* உலக கோப்பையில் முதல் பாதிக்குள் 5 கோல்களை அள்ளிக்கொடுத்த மோசமான பட்டியலில் ஜாரே மற்றும் ஹைதி அணிகளுடன் (1974–ம்ஆண்டு) பிரேசிலும் இணைந்துள்ளது.

* சொந்த மண்ணில் பெரிய போட்டிகளில் (நட்புறவு ஆட்டத்தை தவிர்த்து) பிரேசில் தோற்பது 39 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1975–ம் ஆண்டு கோபாஅமெரிக்கா போட்டியை நடத்திய போது பெரு அணியிடம் தோற்றிருந்த பிரேசில் அணி அதைத் தொடர்ந்து 63 ஆட்டங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் சந்தித்த முதல் தலைகுனிவு இது தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி