செய்திகள்,திரையுலகம் காதலை உணர்ந்தேன் (2014) திரை விமர்சனம்…

காதலை உணர்ந்தேன் (2014) திரை விமர்சனம்…

காதலை உணர்ந்தேன் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவான் என்று அறிவுரை கூறுகிறாள்.

முதலில் இதற்கு மறுக்கும் நாயகியை, தான் காதலிப்பதால் தனக்கு என்னென்ன நன்மை உண்டாகிறது என்பதை எடுத்துக்கூறி அவளை காதல் செய்ய வைக்க ஒப்புக்க வைக்கிறாள் தோழி.அதன்படி, அதே ஊரில் இருக்கும் நாயகனை காதலிக்குமாறும் தோழி யோசனை கூறுகிறாள். நாயகியும் அவனிடம் வலியபோய் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனோ இவளை வெறுத்து ஒதுக்குகிறான். இறுதியில், அவனை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறாள்.காதலிக்க ஆரம்பித்தால் தனக்கு தேவையானதை அவனிடமிருந்து எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நாயகியின் ஆசை நிறைவேறாமல் போகிறது. தான் கேட்ட எதையும் தனது காதலனால் வாங்கித்தர முடிவதில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகன் அவனது தாத்தாவை பார்க்க 3 நாள் பயணமாக வெளியூர் செல்கிறான். அந்த நேரத்தில் நாயகியின் தோழி வீட்டுக்கு வரும் அவளது முறைமாமன் நாயகியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதலில் விழுகிறான். அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். அவளும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். ஒருநாள் தோழியின் முறைமாமன் நாயகியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளிடம் கூறுகிறான்.இறுதியில் நாயகி தனக்கு காதல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து தோழியின் முறைமாமனை உதறித் தள்ளினாளா? அல்லது தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருபவன்தான் முக்கியம் என்று தோழியின் முறைமாமனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

கொஞ்சம் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிவிடலாம் என்பதற்கு இதுமாதிரியான படங்கள் ஒரு சிறு உதாரணம். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் தயாரிப்பு சங்கங்கள் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக இப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்கூட இனிமேல் தியேட்டருக்கு வர தயங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.இப்படத்தின் லொக்கேஷன்களுக்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. வீட்டு மொட்டை மாடி, முற்றம், ஒற்றையடி பாதை என மாறி மாறி மூன்று லொக்கேஷன்களிலேயே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்.அதேபோல், நாயகன், நாயகியைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரே உடையிலேயே வந்து போகிறார்கள். காதலிக்காக நாயகன் திருடும் காட்சியில், அவர் திருடவேண்டும் என்பதற்காகவே அனைவரும் பணத்தை அவருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போவதுபோல் காட்சிப்படுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை.

நாயகன், நாயகி முகங்களை பார்த்து இவர்களுக்கு எதற்கு டூயட் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. பாடல் வைத்தால் இசைமைப்பாளருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘சித்தாட கட்டிக்கிட்டு’ ‘வெண்ணிலா ஓ வெண்ணிலா’ போன்ற அழகான பழைய பாடல்களுக்கு இந்த கேவலமான மூஞ்சிகளை ஆடவிட்டு அந்த பாடல்களை கெடுத்ததோடு, நமக்கும் வெறுப்பை வரவழைத்திருக்கிறார்கள். அதற்கு பாடல்களே வைக்காமல்கூட இருந்திருக்கலாம்.கதாபாத்திரங்கள் தேர்வு தொடங்கி, ஒவ்வொரு காட்சி எடுத்தவரைக்கும் படம் முழுக்க சொதப்பல்தான். கிரேன் மனோகர் 4 பேருடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கோபத்தை வரவழைத்திருக்கிறார். தஷியின் பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை.

மொத்தத்தில் ‘காதலை உணர்ந்தேன்’ சொதப்பலான காதல் கதை…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி