இதர பிரிவுகள்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்… தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு post thumbnail image
சென்னை ராயப்பேட்டையில் தகராறு நடக்கும் இடத்துக்கு தனி ஒருவனாகச் சென்ற காவலர் ராஜவேலுவை ரவுடிக் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று போன் கால் வந்தது. அதில் பேசியவர், `ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகில் உள்ள பகுதியில் சில ரவுடிகள் மது அருந்திக்கொண்டு அவ்வழியாகச் செல்பவர்களிடம் தகராறு செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட முதல்நிலை காவலர் ராஜவேலுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது, அங்கு சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து செல்லும்படி ராஜவேலு கூறியுள்ளார். அப்போது, தனியாக சிக்கிக்கொண்ட காவலர் ராஜவேலுவை மது அருந்தியவர்கள் தாக்கினர். அவர்களுடன் ராஜவேலு, தனியொருவனாகப் போராடினார். ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் அரிவாள், கத்தியால் ராஜவேலுவை சரமாரியாகத் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்தக்கும்பல் ஆட்டோவில் தப்பியது.

உயிருக்குப் போராடிய ராஜவேலுவை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜவேலுவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. மேலும் அவரின் இடது காது, கன்னத்தில் தலா ஒரு வெட்டுக்காயம் உள்ளது. ராஜவேலுவைத் தாக்கியவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவர்கள், ராயப்பேட்டை காவல் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள அரவிந்தன் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. தொடர்ந்து, ராஜவேலுவைத் தாக்கிய அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன் உள்பட 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

கம்பீரம்’ படத்தில் நடிகர் வடிவேலு, கலவரத்தைக் கட்டுப்படுத்த வித்தியாசமான கெட்டஅப்பில் சென்று ஒரு கும்பலிடம் சிக்கிக் கொள்வார். அதுபோலத்தான் ராஜவேலு, தனியாகச் சென்று ரவுடி கும்பலிடம் சிக்கியுள்ளார். சமீபகாலமாக போலீஸாரைத் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகிவருகிறது. இதனால், பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் நிலையில், சென்னை மாநகரக் காவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி