கேள்வி: உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே?
பதில்: நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளை சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்றுகூட போடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்கிறேன்.
‘தசாவதாரம்’ படம் எடுத்தபோது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்கு போட்டார். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் எடுத்த போது அந்த பெயரை வைக்கக்கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டுபிடிப்பது? ‘சண்டியர்’ படத்தை எடுத்தபோது எதிர்த்தனர். அதன் பிறகு ‘சண்டியர்’ என்ற பெயரிலேயே ஒரு படமும் தயாராகி வெளிவந்து விட்டது. ‘பாபநாசம்’ படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர்.
என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
கே: திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அதுபோல்தான் இதுவும்.
கே: மருதநாயகம் படத்தை மீண்டும் எடுப்பீர்களா?
ப: மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப்படம் என்று அவர்களுக்கு நினைவூட்ட இருக்கிறேன். இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி