செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…

ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…

ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!… post thumbnail image
இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வரலாறு படைத்த இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால்இறுதியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2000-ம் ஆண்டு தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சங்கக்கரா இதுவரை 404 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 25 சதம் உள்பட 14,234 ரன்கள் குவித்துள்ளார். இந்த உலக கோப்பையில் மட்டும் 7 ஆட்டங்களில் விளையாடி 541 ரன்கள் சேர்த்தார். மேலும் சில மாதங்கள் டெஸ்டில் மட்டும் விளையாட சங்கக்கரா திட்டமிட்டுள்ளார்.

அதே சமயம் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இலங்கை அணியின் மற்றொரு மூத்த வீரர் மஹேலா ஜெயவர்த்தனே நேற்றுடன் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போட்டார். 1998-ம் ஆண்டின் முதல்முறையாக சர்வதேச போட்டியில் ஆடிய 37 வயதான ஜெயவர்த்தனே இதுவரை 448 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 19 சதங்கள் உள்பட 12,650 ரன்கள் குவித்துள்ளார். இந்த உலக கோப்பையில் ஒரு சதம் உள்பட 125 ரன்கள் மட்டுமே எடுத்தார். இலங்கை அணியின் தூண்களாக விளங்கிய சங்கக்கரா, ஜெயவர்த்தனேவுக்கு உலக கோப்பையை வெல்வது தான் கனவாக இருந்தது. ஏற்கனவே 2007 மற்றும் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருந்தது. இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று ஏங்கித் தவித்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

37 வயதான சங்கக்கரா கூறுகையில், தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அணி. அப்படிப்பட்ட அவர்களுக்கு எதிராக 7 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்தது மிகவும் ஏமாற்றத்திற்குரிய விஷயமாகும். இது வாழ்வா-சாவா ஆட்டம் போன்றது. ஏதாவது ஒரு அணி தோற்று தான் ஆக வேண்டும். ஏமாற்றங்கள் என்பது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் சகஜம். தோல்வி வருத்தம் அளிக்கக்கூடியது தான் என்றாலும், அதையே நினைத்து கொண்டிருக்கக்கூடாது. அடுத்த கட்டத்திற்கு வந்து விட வேண்டும். இலங்கை அணி சரியான வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். மேத்யூஸ், அருமையான அணித்தலைவர். தற்போதைய இலங்கை வீரர்களுடன் இணைந்து விளையாடிய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

ஜெயவர்த்தனே கூறுகையில், அணியை விட்டு விலகுவதற்கு இதுவே சரியான நேரமாகும். இதற்காக நான் வருத்தப்படவில்லை. என்றாவது ஒரு நாள் ஓய்வு பெற்று தான் ஆக வேண்டும். ஒவ்வொரு தருணத்தையும் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். தற்போதைய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவமாகும் என்றார். இலங்கை அணிக்காக நீண்ட காலம் பங்களிப்பை அளித்த இவர்களுக்கு இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி