வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வசித்து வருகிறார். அந்த மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்கள், அமெரிக்க ரகசிய சேவைகள் படையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்த ஒரு கடித உறையைக் கண்டதும் அந்த படையினர் சந்தேகம் கொண்டனர். அந்த உறையை ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் விஷம் எதுவும் தடவப்படவில்லை என தெரியவந்தது.
ஆனால் அந்த முடிவை மறு ஆய்வு செய்வதற்காக மற்றொரு பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதில் அந்த உறையில் மிகக்கொடிய விஷமான சயனைடு தடவப்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. இதை உறுதி செய்ய மேலும் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஒபாமாவை கொல்ல குறி வைத்து சயனைடு தடவிய கடிதம் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து வேறு எந்த தகவலையும் தெரிவிக்க ரகசிய சேவைகள் படை மறுத்து விட்டது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சயனைடு விஷம், நாக்கில் பட்டால் அதன் சுவையை உணரும் முன்பாகவே மரணம் சம்பவித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி