செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் சங்கக்கராவின் சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் சங்கக்கராவின் சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் சங்கக்கராவின் சாதனைகள்  – ஒரு பார்வை… post thumbnail image
உலக கோப்பையுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற உள்ள 37 வயதான இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா வியப்பூட்டும் வகையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

* ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சங்கக்கரா 124 ரன்கள் சேகரித்தார். ஏற்கனவே அவர் தனது முந்தைய மூன்று லீக் ஆட்டங்களிலும் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம் 44 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதத்தை ருசித்த முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (1982–1983ம் ஆண்டு), சயீத் அன்வர் (1993), தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ் (2002), டிவில்லியர்ஸ் (2010), குயின்டான் டி காக் (2013), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (2014) ஆகியோர் தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. நீண்ட காலமாக நீடித்த இந்த சாதனைக்கு சங்கக்கரா நேற்று முடிவு கட்டினார்.

* ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் நொறுக்கிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (1996 உலக கோப்பை), இந்தியாவின் சவுரவ் கங்குலி (2003), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு உலக கோப்பையில் 3 சதங்கள் அடித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

* சங்கக்கராவுக்கு இது 4–வது உலக கோப்பையாகும். ஆனால் தனது முதல் மூன்று உலக கோப்பை போட்டிகளில் (2003, 2007, 2011) ஒரே ஒரு சதம் மட்டும் அடித்திருந்த சங்கக்கரா இந்த உலக கோப்பையில் 4 சதங்களை எடுத்து பிரமாதப்படுத்தியிருப்பதுடன், உலக கோப்பையில் தனது சதங்களின் எண்ணிக்கையை 5–ஆக உயர்த்தியுள்ளார்.

உலக கோப்பையில் ஒட்டுமொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கருக்கு (6 சதம்) அடுத்த இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (இவரும் 5 சதம்) சமன் செய்துள்ளார்.

* விக்கெட் கீப்பிங் பணியிலும் சங்கக்கரா புதிய அத்தியாயம் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 2 வீரர்களை கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து 36 ஆட்டங்களில் 54 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கும் (41 கேட்ச் மற்றும் 13 ஸ்டம்பிங்) சங்கக்கரா உலக கோப்பை அரங்கில் அதிக வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த சாதனை வரிசையில் முதலிடம் வகித்த ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் (31 ஆட்டத்தில் 52 பேர் ஆட்டம் இழப்பு) பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

* ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் சங்கக்கரா 2038 ரன்கள் (48 ஆட்டம்) குவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் தேஸ்மான்ட் ஹெய்ன்ஸ் (3067 ரன்), விவியன் ரிச்சர்ட்ஸ் (2769 ரன்) ஆகியோருக்கு அடுத்து ஆஸ்திரேலிய தேசத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வெளிநாட்டு வீரர் சங்கக்கரா தான். சங்கக்கராவின் தொடர்ச்சியான 4 சதங்கள் வருமாறு:–

105* வங்காளதேசம் – மெல்போர்ன்

117* இங்கிலாந்து – வெலிங்டன்

104 ஆஸ்திரேலியா – சிட்னி

124 ஸ்காட்லாந்து – ஹோபர்ட்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி