தி லாஸ்ட் பேரடைஸ் – அனில் கிருஷ்ணன்
பல ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வரும் ஒருவனின் மன ஓட்டத்தை வசனமே இல்லாமல், இசையை மட்டுமே பயன்படுத்தி சொல்லியிருக்கிறார் அனில் கிருஷ்ணன். குடும்ப புகைப்படம் ஒன்றை மட்டும் தனது ஜீவனாய் வைத்து, அதை சுமந்துகொண்டு ஊருக்கு பயணிப்பதை படமாக்கியிருக்கிறார். இதில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சோமசுந்தரத்தின் நடிப்பு அபாரம். கதையில் ரொம்பவும் அழுத்தமில்லாததால் அதிகமாக ரசிக்க முடியவில்லை.
அகவிழி – கோபகுமார்
அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சாராவை அஞ்சன் ஒருதலையாக காதலிக்கிறான். கனவிலேயே அவளுடன் வாழ்ந்து நாட்களை கடத்தும் அஞ்சனுக்கு, இடையில் நுழையும் வடநாட்டு இளைஞனால் தனது காதலுக்கு இடைஞ்சல் வருமோ? என பயப்படுகிறான். இவற்றை அஞ்சனின் கனவுகளில் அடுக்கி கதை சொல்லியிருக்கிறார் கோபகுமார். அஞ்சன்-சாராவாக வரும் அரவிந்த்-நிஷாவின் நடிப்பு ரொம்பவும் இயல்பாக இருக்கிறது. இப்படம் ஓகே ரகம்தான் என்றாலும், ஒருகட்டத்திற்கு மேல் எது கனவு, எது நிஜம் என்பதை யூகித்துவிட முடிவதால் படத்தில் சஸ்பென்சுக்கு வேலை இல்லை.
புழு – சாருகேஷ்
மலைப் பகுதியில் இரண்டு பேர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சாகக் கிடக்கிறார்கள். இவர்கள் எதற்காக தாக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு இருக்கிற பகை என்ன? என எதுவும் சொல்லாமல் யார், யாரை முதலில் சாகடிப்பது என்று பகையுணர்வோடே கதை நகர்கிறது. இவர்களுடைய மரண போராட்டத்தை கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார் சாருகேஷ். இந்த கதையில் திகில் கலந்த கதையை விறுவிறுப்புடன் சொல்ல நினைத்திருக்கும் இயக்குனருக்கு அது எதுவுமே இல்லாதது குறையே.
நல்லதோர் வீணை – மோனேஷ்
12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கார்த்தி. பள்ளி முடிந்து மாலையில் டியூசன் போகிறான். அங்கு டியூசன் மாஸ்டரால் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தப்படுகிறான். வெளியில் சொன்னால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்பதால் வேறு வழியின்றி அந்த கொடுமையை தாங்குகிறான். அப்போது, தன்னைப் போலவே இன்னொரு மாணவனையும் டியூசன் மாஸ்டர் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்துவதை அறிகிறான் கார்த்தி. இதன்பிறகு அவன் என்ன முடிவெடுத்தான் என்பதை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இந்த படத்தை எடுத்திருக்கிறார் மோனேஷ்.
மது – ரத்னகுமார்
பள்ளிப் பருவத்தில் ஒருதலையாக காதலித்த பெண்ணிற்கு திருமணம் ஆகப்போகிறது என்பதை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறான் குமார். குடித்து விட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நண்பர்களிடம் கூறி மிரட்டுகிறான். இதுமட்டுமில்லாமல், போதையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் போட்டு அவளையும் தொந்தரவு செய்கிறான். இவ்வாறு அவன் செய்யும் ரகளைகளை நகைச்சுவையாக படமாக்கியிருக்கிறார் ரத்னகுமார். குமாராக வரும் சனந்த் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கிறது.
நீர் – கார்த்திக் சுப்பாராஜ்
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்தை குறும்படாக இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். 2011-ம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். அதனால், இப்படத்தில் விஜய் சேதுபதி ரொம்பவும் மெலிந்து காணப்படுகிறார். மீனவ மக்களுக்கு இப்படத்தின் மூலம் நல்ல ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
மேலே உள்ள ஆறு குறும்படங்களில் நீர், மது, நல்லதோர் வீணை ஆகிய படங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. மற்ற குறும்படங்களில் ஏதோ ஒரு குறை இருப்பதுபோல் தெரிகிறது. 2000 குறும்படங்களில் ஐந்து குறும்படங்களை மட்டும் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். பின்வரும் காலங்களில் இதுபோன்ற குறும்படங்களை தேர்வு செய்வதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. அதேபோல், பழைய குறும்படங்களை தேர்வு செய்வதைவிட, புதிய குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள் என நம்பலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி