நாளை பிற்பகலில், பிரதமர் மோடி, மொரீஷியஸ் தீவுக்குச் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, 13-ந் தேதி பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.காலையில் கொழும்பு சென்றடையும் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை மற்றும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பின்னர், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய-இலங்கை உறவு குறித்த முக்கியமான பேச்சுவார்த்தையில் மோடி கலந்து கொள்கிறார். மதியம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அளிக்கும் மதிய விருந்தில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடுகிறார். பிரசித்தி பெற்ற புத்த ஸ்தலமான மகாபோதி சொசைட்டி மற்றும் இந்திய அமைதிப்படை நினைவு மண்டபத்தில் இலங்கையில் அமைதிப் பணியில் கலந்து கொண்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
ஸ்ரீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இலங்கையின் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிபர்கள் ஏற்பாடு செய்யும் விருந்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் நிர்மல் பால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோருடன் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெறுகிறது.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவை மோடி சந்திப்பாரா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், அதற்கான வாய்ப்பை அதிகாரிகள் மறுக்கவில்லை.13-ந் தேதி இரவு, அதிபர் சிறிசேனா ஏற்பாடு செய்யும் விருந்தில் மோடி கலந்து கொள்கிறார்.14-ந் தேதி, அனுராதபுரத்தில் உள்ள புத்த ஆலயங்களுக்கு பிரதமர் மோடி செல்கிறார். கி.பி. 249-ம் ஆண்டு, அசோகரின் மகள் சங்கமித்ராவால் கொண்டுவரப்பட்டு, நட்டு வைக்கப்பட்ட மகாபோதி மரத்தை அவர் பார்வையிடுகிறார். தலைமன்னாருக்கு செல்லும் அவர், புதிய ரெயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி போகிறார்.
இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை தொடங்கிவைக்கிறார்.யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அன்று இரவு வடக்கு மாகாணத்தின் கவர்னரை சந்தித்து உரையாடுகிறார்.
இந்த சந்திப்பில் 13-வது அரசியல் சட்டத்திருத்தம், இலங்கையில் தமிழ் அகதிகளின் மறுகுடியேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், பிரதமரின் இலங்கை பயணத்துக்கு பிறகு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.பிரதமரின் பயணத்தின் போது இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி