செய்திகள்,விளையாட்டு பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…

பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!…

பாகிஸ்தான் அணி 222 ரன்களில் சுருண்டது!… post thumbnail image
ஆக்லாந்து:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமாக விளையாடியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்கவில்லை. துவக்க வீரர் சர்ப்ராஸ் அகமது 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். யூனிஸ்கான் 37 ரன்களில் அவுட் ஆனார். 175 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி தனது ஸ்கோரை உயர்த்த முடியாமல் தவித்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை விட்ட நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

பொறுப்புடன் விளையாடிய கேப்டன் மிஸ்பா தனது அரை சதத்தை நிறைவு செய்ய, அவருடன் சாகித் அப்ரிடி களத்தில் இருந்தார். 41-வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், போட்டியின் ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய அப்ரிடி 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிஸ்பா 56 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அப்போட், மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்க அணி 47 ஓவர்களில் 232 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி