செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை…

உலக கோப்பையில் செய்யப்பட்ட சாதனைகள் – ஒரு பார்வை… post thumbnail image
உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரையில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் பின்வருமாறு:-

மின்னல் வேக சதம்:-

2011-ம் ஆண்டு உலக கோப்பையில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்ததே உலக கோப்பையில் அதிவேக சதமாகும். இந்த சாதனை தற்போதைய உலக கோப்பையில் முறியடிக்கப்பட கணிசமான அறிகுறிகள் தென்படுகின்றன.

வித்தியாசமான ஷாட்டுகளை அடிப்பதில் கில்லாடியான தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கடந்த மாதம் 31 பந்துகளில் சதம் விளாசி ஒரு நாள் போட்டியில் புதிய வரலாறு படைத்தார். எனவே உலக கோப்பையிலும் அவர் மின்னல்வேக சதத்தை பதிவு செய்ய அதிகமான வாய்ப்புள்ளது. இதே போல் ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்த நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், 37 பந்துகளில் சதம் கண்டவரான தனது கடைசி தொடரில் விளையாடும் அப்ரிடி (பாகிஸ்தான்), ஆஸ்திரேலிய அதிரடி மன்னர்கள் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், இந்தியாவின் விராட் கோலி, ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் உள்ளிட்டோரும் இதற்கான வாய்ப்பில் இருக்கிறார்கள்.

தனிநபர் அதிகபட்சம்:-

தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் 1996-ம் ஆண்டு உலக கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 188 ரன்கள் குவித்ததே இந்த நாள் வரை உலக கோப்பையில் தனிநபர் அதிகபட்சமாக இருக்கிறது. 19 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த சாதனையும் முடிவுக்கு வரலாம்.

இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை செஞ்சுரி அடித்து சரித்திரம் படைத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்குள்ள ஆடுகளங்களில் துல்லியமாக கணித்து விளையாடினால் உலக கோப்பையில் முதல் இரட்டை செஞ்சுரி என்பது சாத்தியப்படாத விஷயமல்ல. பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களுக்கே இது போன்ற சாதனையை முறியடிக்க அதிகமான வாய்ப்பு உண்டு. அந்த வகையில் கெய்ல், பிரன்டன் மெக்கல்லம், ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரை வரிசைப்படுத்தலாம்.

விக்கெட் கீப்பர் சாதனை:-

ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 52 பேரை ஆட்டம் இழக்கச் செய்ததே (31 ஆட்டம்) உலக கோப்பையில் விக்கெட் கீப்பரின் சிறந்த செயல்பாடாகும். அவரை நெருங்கியுள்ள இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கரா இந்த முறை முந்துவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. சங்கக்கரா இதுவரை உலக கோப்பையில் 30 ஆட்டங்களில் விளையாடி 46 பேரை அவுட் ஆக்கி இருக்கிறார்.

அதிக டக்-அவுட்:-

உலக கோப்பையில் அதிக முறை ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆன மோசமான பட்டியலில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்டிலேவும், பாகிஸ்தானின் இஜாஸ் அகமதுவும் (தலா 5 முறை) உள்ளனர். தற்போது 15 ஆட்டத்தில் 4 டக்-அவுட் ஆகியுள்ள தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் இந்த கேவலமான சாதனையை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

மொத்த விக்கெட்:-

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 71 விக்கெட்டுகளுடன் (39 ஆட்டம்) அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இச்சாதனை இந்த முறை தகர்க்கப்பட வாய்ப்பு குறைவு தான். அவருக்கு அடுத்த நிலையில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் இலங்கையின் மலிங்கா 31 விக்கெட்டுகளுடன் (15 ஆட்டம்) இருக்கிறார்.

அதிக ரன்கள்-சதம்:-

அதிக ரன்கள் குவிப்பில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (2,278 ரன், 45 ஆட்டம்) கொடிகட்டி பறக்கிறார். இச்சாதனையை யாராலும் நெருங்கக்கூட வாய்ப்பில்லை. தற்போது விளையாடும் வீரர்களில் இலங்கையின் சங்கக்கரா சேர்த்துள்ள 991 ரன்களே (30 ஆட்டம்) உலக கோப்பையில் அதிகபட்சமாகும். அதிக சதத்திலும் தெண்டுல்கர் (6) தான் முதலிடத்தில் உள்ளார். இப்போது 3 சதங்களுடன் உள்ள டிவில்லியர்ஸ், இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோர் இதை சமன் செய்யலாம்.

அதிக ஆட்டங்கள்:-

அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (46 ஆட்டம்). பாண்டிங்கிடம் உள்ள இச்சிறப்பை தட்டிப்பறிக்க நீண்ட காலம் ஆகலாம். அடுத்த இடத்தில் உள்ள ஜெயவர்த்தனே 33 ஆட்டங்களுடன் இருக்கிறார். அவர் இந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை விளையாடினாலும் ஆட்டம் எண்ணிக்கை 42 ஆகத் தான் உயரும். அதிக முறை கேப்டனாக பணியாற்றியதிலும் ரிக்கிபாண்டிங்கின் (29 ஆட்டம்) சாதனைக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி