மெல்போர்ன் (இந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டி உள்பட 5 ஆட்டம்): உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய மைதானம் இது தான். நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஸ்டேடியம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. சர்வதேச முதலாவது டெஸ்ட், சர்வதேச முதலாவது ஒரு நாள் போட்டி நடந்த மைதானம் என்ற பெருமைக்குரியது. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்திய போது அதன் இறுதி ஆட்டம் இங்கு தான் அரங்கேறியது. இந்த முறையும் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. இங்கு இதுவரை 139 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. ஐ.சி.சி. லெவன் அணி 2005-ம் ஆண்டு ஆசிய லெவனுக்கு எதிராக 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தின் அதிகபட்சமாகும். 1979-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 94 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான லீக் ஆட்டமும் இங்கு நடக்க உள்ளது.
சிட்னி (அரைஇறுதி, கால்இறுதி உள்பட 5 ஆட்டம்): கிரிக்கெட் வீரர்கள் ரசித்து விளையாடும் புகழ்பெற்ற மைதானங்களில் சிட்னியும் ஒன்று. இதுவரை 146 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 44 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணி இங்கு 124 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 81-ல் வெற்றி பெற்றுள்ளது. 10 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2006-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 368 ரன்கள் திரட்டியதே அதிகபட்சமாகும்.
பெர்த் (3 ஆட்டம்): உலகின் அதிவேக ஆடுகளம் என்ற சிறப்புக்குரியது. பந்து பயங்கரமாக எகிறும் (பவுன்ஸ்) தன்மை கொண்டது. நடப்பு உலக கோப்பையில் இந்திய அணி இங்கு 2 லீக்கில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) விளையாட இருக்கிறது. 22 ஆயிரம் இருக்கைகள் கொண்டது. இருக்கை வசதியை 24,500 வரை தற்காலிகமாக உயர்த்திக் கொள்ளலாம். இதுவரை நடந்துள்ள 75 ஒரு நாள் போட்டிகளில் 21 சதங்கள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் ஒரு இந்தியரும் இங்கு சதம் கண்டதில்லை. 2007-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்தது இந்த மைதானத்தின் சிறந்த ஸ்கோராகும்.
அடிலெய்டு (கால்இறுதி உள்பட 4 ஆட்டம்): இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடக்க இருப்பதால், அடிலெய்டு மைதானம் இப்போது ரசிகர்கள் மத்தியில் தனிக்கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நாள் வரை 77 ஒரு நாள் போட்டிகள் நடந்திருக்கின்றன. இங்கு பதிவாகி இருக்கும் தனிநபர் அதிகபட்ச ரன்களில் முதல் 7 இடங்களில் வெளிநாட்டவர்களே இருக்கிறார்கள். இதில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (156 ரன்), இந்தியாவின் சவுரவ் கங்குலி (141 ரன்), வி.வி.எஸ்.லட்சுமண் (131 ரன்) ஆகியோரும் அடங்குவர். இங்கு 50 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும். இந்த மைதானத்தில் இந்திய அணி 13 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் ‘டை’ ஆனது.
பிரிஸ்பேன் (3 ஆட்டம்): ‘கப்பா’ என்று அழைக்கப்படும் பிரிஸ்பேனில் ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் நேரில் ஆட்டத்தை ரசிக்கலாம். 73 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.
கான்பெர்ரா (3 ஆட்டம்): ஆஸ்திரேலியாவின் தலைநகரான இங்கு இதுவரை 4 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே நடந்திருக்கின்றன.
ஹோபர்ட் (3 ஆட்டம்): இதுவரை 32 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு தான் 2012-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அந்த அணி நிர்ணயித்த 321 ரன்கள் இலக்கை இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதத்தின் துணையுடன் 36.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.
ஆக்லாந்து (அரைஇறுதி உள்பட 4 ஆட்டம்): நியூசிலாந்து மண்ணில் அதிக ஒரு நாள் போட்டிகள் (68) நடந்த மைதானம் இது தான். 50 ஆயிரம் இருக்கை வசதிகளை உள்ளடக்கியது. நியூசிலாந்து அணி 2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 340 ரன்ள் சேர்த்தது அதிகபட்சமாகும். இதே நியூசிலாந்து 2007-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 73 ரன்னில் முடங்கியது குறைந்த பட்சமாகும்.
வெலிங்டன் (கால்இறுதி உள்பட 4 ஆட்டம்): இதுவரை 23 ஒரு நாள் போட்டிகளை சந்தித்துள்ள வெலிங்டன் வெஸ்ட்பாக் மைதானம் 33,500 இருக்கை வசதிகளை கொண்டது.
கிறைஸ்ட்சர்ச் (3 ஆட்டம்): உலக கோப்பையையொட்டி புதிதாக கட்டப்பட்ட கிறைஸ்ட்சர்ச் ஹாக்லே ஓவல் மைதானத்தில் இந்த உலக கோப்பையின் தொடக்க ஆட்டம் (நியூசிலாந்து-இலங்கை) நடக்க இருக்கிறது. இந்த மைதானம் உலக கோப்பைக்காக பயன்படுத்தப்படும் 100-வது மைதானம் என்ற சிறப்பையும் பெறுகிறது.
நேப்பியர் (3 ஆட்டம்): இதுவரை 39 ஒரு நாள் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் இங்கு 20 சிக்சர்கள் அடித்திருக்கிறார்.
ஹாமில்டன் (3 ஆட்டம்): 24 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. உலக கோப்பையில் இந்திய அணி இங்கு அயர்லாந்துடன் மோத இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 2007-ம்ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 181 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
டுனெடின் (3 ஆட்டம்): 6 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் ஆட்டத்தை பார்க்க முடியும். அதிரடி பேட்டிங்குக்கு உகந்த மைதானம்.
நெல்சன் (3 ஆட்டம்): இதுவரை 2 ஒரு நாள் போட்டி மட்டுமே நடந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி