செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையுடன் விடைபெறும் வீரர்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையுடன் விடைபெறும் வீரர்கள் – ஒரு பார்வை…

உலக கோப்பையுடன் விடைபெறும் வீரர்கள் – ஒரு பார்வை… post thumbnail image
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சில நட்சத்திர வீரர்கள் கிரிக்கெட்டுக்கு ‘குட்பை’ சொல்ல தயாராகி வருகிறார்கள். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

மஹேலா ஜெயவர்த்தனே:-
இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் 37 வயதான மஹேலா ஜெயவர்த்தனே ஏற்கனவே 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த உலக கோப்பையுடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாக முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். ஜெயவர்த்தனேவுக்கு இது 5-வது உலக கோப்பை என்பது கூடுதல் விசேஷமாகும். ஒரு நாள் போட்டியில் இதுவரை 441 ஆட்டங்களில் விளையாடி 18 சதம் உள்பட 12,525 ரன்கள் குவித்துள்ளார்.

சங்கக்கரா:-
இலங்கை விக்கெட் கீப்பர் 37 வயதான சங்கக்கரா இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். அதன் பிறகு சில மாதங்கள் டெஸ்டில் மட்டும் விளையாட திட்டமிட்டுள்ளார். சமீபகாலமாக எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் சங்கக்கரா 397 ஆட்டங்களில் 13,693 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 21 சதங்களும் அடங்கும். ஜெயவர்த்தனேவும், சங்கக்கராவும் இலங்கை மிடில் வரிசையின் தூண்கள் ஆவர். இவர்கள் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் நிலைமை திண்டாட்டம் தான். 2007-ம் ஆண்டு ஜெயவர்த்தனே தலைமையில் இலங்கை அணி இறுதிப்போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது. கடைசி இரு உலக கோப்பை போட்டிகளில் நாங்கள் இறுதி ஆட்டத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பதற்கு இரண்டு முறையும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியதே உதாரணம். இந்த முறை கடைசி தடையையும் வெற்றிகரமாக கடப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார், ஜெயவர்த்தனே.

சாகித் அப்ரிடி:-
பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் 34 வயதான சாகித் அப்ரிடியும் இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டை துறக்கிறார். 1999, 2003, 2007, 2011-ம் ஆண்டு உலக கோப்பைகளில் விளையாடியவரான அப்ரிடிக்கும் இது 5-வது உலக கோப்பையாகும். சமீபத்தில் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சின் சாதனையை உலக கோப்பையின் போது முறியடிக்க முயற்சிப்பேன், என்கிறார் அப்ரிடி. இவர் 391 ஒரு நாள் போட்டிகளில் 7,948 ரன்களும், 393 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்த உலக கோப்பையின் போது 8 ஆயிரம் ரன் மற்றும் 400 விக்கெட் மைல்கல் இரண்டையும் அடைய வேண்டும் என்பது அப்ரிடியின் இலக்குகளில் ஒன்றாகும். உலக கோப்பைக்கு பிறகு அப்ரிடியின் அதிரடியை 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் பார்க்கலாம்.

மிஸ்பா உல்-ஹக்:-
155 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியும் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை, மந்தமான யுக்தியை கையாள்பவர் என்றெல்லாம் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொள்ளும் 40 வயதான பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்குக்கு அதற்கு பரிகாரம் தேடுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். ஏனெனில் உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டு, டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்து விட்டார்.

மைக்கேல் கிளார்க்:-
அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு நாள் போட்டியை மறந்து விட்டு டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். ஆனால் சொந்த மண்ணில் உலக கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான் கிளார்க்கின் கனவு. அதனால் தான் காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்த போதிலும், இரவு பகல் பாராமல் பயிற்சி மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு ஓரளவு தேறி இருக்கிறார். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் 2-வது லீக் ஆட்டத்தில் அவர் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த கேப்டன் (ஸ்டீவன் சுமித்) தயாராகி விட்டதால் இந்த உலக கோப்பையுடன் மைக்கேல் கிளார்க் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. 34 வயதை நெருங்கும் மைக்கேல் கிளார்க் 238 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,762 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதே போல் இந்திய கேப்டன் டோனி, கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் (இருவரும் வெஸ்ட் இண்டீஸ்), ஜேம்ஸ் ஆண்டர்சன், இயான் பெல்(இங்கிலாந்து), பிரன்டன் மெக்கல்லம், வெட்டோரி (நியூசிலாந்து), தில்ஷன் (இலங்கை), பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன், ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கும் இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கக்கூடும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி