செய்திகள் குறும்படத்தால் வெளியான சித்ரவதை முகாம் கொடுமைகள்!…

குறும்படத்தால் வெளியான சித்ரவதை முகாம் கொடுமைகள்!…

குறும்படத்தால் வெளியான சித்ரவதை முகாம் கொடுமைகள்!… post thumbnail image
சோங்ஜின்:-வட கொரியாவிற்கு புதிய தலைவலியை உண்டாக்கியிருக்கும் பெண்ணின் பெயர் ஜி ஹியுன் பார்க். ஏற்கனவே ‘தி இன்டர்வியூ’ என்ற படத்திற்காக அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் நடந்த பிரச்சனை தற்போது ஓய்ந்த நிலையில் ‘தி அதர் இன்டர்வியூ’ என்ற குறும்படத்தில் ஜி ஹியுன் பார்க் தனது வட கொரிய அனுபவங்களை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு வட கொரியாவில் நடந்த சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை தாங்க முடியாமல் சீனாவிற்கு தப்பித்துச்சென்றார்.

சீன அதிகாரிகள் அவரது பூர்வீகத்தை கண்டுபிடித்து அவரை வட கொரியாவிற்கு அனுப்பி வைத்தனர். தன் நாட்டிலிருந்து ஓடிய அவரை பழிவாங்க என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வட கொரியாவில் கால் வைத்த அவரை கைது செய்த அரசு, ‘லேபர் கேம்ப்’ எனப்படும் சித்தரவதை முகாமிற்கு அனுப்பியது. ஓராண்டு அங்கு அவர் அனுபவித்த துயரங்களுக்கு எல்லை இல்லை, எந்த வார்த்தையாலும் விளக்க முடியாத உச்சகட்ட கொடுமையை அனுபவித்த அவர் அதை, ‘தி அதர் இன்டர்வியூ’ என்ற குறும்படத்தில் கூறியுள்ளார். ‘அதிகாலை 4.30 மணிக்கு எழுப்பி விடுவார்கள். எதுவும் சாப்பிடாமலே வேலை செய்ய வேண்டும். வேலை என்ன தெரியுமா? வெறும் கையாலே மண்ணைத்தோண்டி சுத்தம் செய்ய வேண்டும். சூரியன் மறையும் வரை வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

மேலும் காட்டுவிலங்குகளின் சாணத்தில் உள்ள தானியங்களை பொறுக்கித்தின்றதை கண்ணீருடன் நினைவு கூர்கிறார். வெறும் கையால் மலம் அள்ளியது, எலியையும் அழுக்கான பச்சை உருளைக்கிழங்கையும் தின்று பசியாறியது, அரசு நடத்திய படுகொலையில் ரெயில் பிளாட்பாரத்தில் கொத்து கொத்தாக பிணங்கள் கிடந்தது என்று விரியும் அவரது வாக்கு மூலம் அடங்கிய அந்த குறும்படத்தை பார்ப்பதற்கு தனி மன தைரியம் வேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி