ஆம் ஆத்மியின் தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியிலும், பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும்கூட, முன்னிறுத்தப்பட்டுள்ள அஜய் மக்கான், சாதர் பஜார் தொகுதியில் நிற்கிறார்.
ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் என 3 கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களை வசீகரித்து ஓட்டுகளை அள்ளுகிற விதத்தில் வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளன.
கடந்த 15 நாட்களாக நடந்து வந்த தீவிர பிரசாரத்தில் அனல் பறந்தது. பாரதீய ஜனதாவுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரசாரம் செய்தனர். அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உமா பாரதி, வெங்கையா நாயுடு மற்றும் 120 எம்.பி.க்கள் களமிறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம், முழுக்க முழுக்க அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சார்ந்துதான் இருந்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் களமிறங்கி பிரசாரம் செய்தனர். வழக்கம்போல தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் நடந்தன.
8 கருத்துக்கணிப்புகளில் 4-ன் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாகவும், 3-ன் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன. ஒரு கருத்துக்கணிப்பு முடிவு, இவ்விரு கட்சிகளும் சமபலத்தில் வரும் எனவும் கூறுகிறது.டெல்லி சட்டசபை தேர்தல், பிரதமர் மோடியின் 10 மாத ஆட்சிக்கு ஒரு கருத்து வாக்கெடுப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, அது எப்படி? அப்படியென்றால் மராட்டியம், ஜார்கண்ட், அரியானா, காஷ்மீர் தேர்தல்களை என்னவென்பது? அவையும் கருத்து வாக்கெடுப்புகள்தானா?… என கேள்வி எழுப்பினார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி கட்சித்தலைவர் அமித் ஷா கருத்து தெரிவிக்கையில், அவர் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. டெல்லி தேர்தல், ஒரு முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்குத்தான். மாநில சட்டசபை தேர்தலை, மத்திய அரசின் செயல்பாடுகளுக் கான கருத்து வாக்கெடுப்பாக கருத முடியாது என கூறினார். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மங்கோல்புரி, சுல்தான்பூர் மஜ்ரா, நாங்க்லாய் தொகுதிகளில் அவர் வீதி பேரணிகளில் வாக்கு சேகரித்தார். கிராரி தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது, தனக்கு 40 ஆண்டு கால நிர்வாக அனுபவம் இருப்பதாக கூறினார். ஆனால் கெஜ்ரிவாலுக்கு 5 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ளதாக சாடினார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது புதுடெல்லி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். மந்திர்மார்க் என்ற இடத்தில் அவர் பேசும்போது, மக்களிடையே தனக்கு ஏகோபித்த ஆதரவு இருப்பதாக கூறினார். சமூக வலைத்தளமான டுவிட்டரிலும் நேற்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் கடவுள் தனது பக்கம் இருப்பதாக கூறி உள்ளார். பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, மதான்பூர் காதர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ஆம் ஆத்மி கட்சி கருப்பு பணத்தை நன்கொடையாக பெற்றுள்ளது. என் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில் நான் பார்த்த மிகவும் வினோதமான கட்சி, ஆம் ஆத்மி. அது சொல்வதை ஒருபோதும் செய்வதில்லை. அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது, தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று கெஜ்ரிவால் சொன்னார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். காங்கிரசின் ஆதரவை பெற மாட்டேன் என்றார். பெற்றார். காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். எடுத்தாரா?… என கேட்டார். கெஜ்ரிவாலின் பொய்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டன எனவும் அவர் சாடினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில், வேட்பாளர் ஜெய் கிஷனுடன் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பெருந்திரளாக மக்கள் கூடி வந்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களை நோக்கி கையசைத்து, ராகுல் காந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள், வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்களில் புதிய வாக் காளர்கள் 1½ லட்சம் பேர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 11 ஆயிரத்து 763 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டு எந்திரங்களின் மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங் குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது. பதிவாகிற ஓட்டுகள் 10ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே, டெல்லி யில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி