செய்திகள் காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு!…

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு!…

காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு!… post thumbnail image
மீரட்:-பிப்ரவரி 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரமான இது சமீபகாலமாக இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. காதலர் தினத்துக்கு இந்தியாவில் இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாடும் இளம் ஜோடிகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தல் மற்றும் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கழுதைக்கு திருமணம் செய்து வைத்தல் உள்ளிட்ட நூதன போராட்டங்களை பல்வேறு இந்து அமைப்புகள் நடத்தி வந்தன.

காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதால் போலீசார் அத்துமீறும் காதலர்களை மட்டும் பிடித்து எச்சரித்து அனுப்பி வருகிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினம் வருகிற 14–ந்தேதி வருகிறது. இதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் இந்து அமைப்புகள் இப்போதே காதலர் தினத்தை எதிர்க்க தயாராகி விட்டன. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் பல்வேறு இந்து அமைப்புகள் தான் காதலர் தினத்துக்கு இப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு நூதன தண்டனை கொடுக்கவும் தயாராகி வருகின்றன. இதற்காக காதலர்களை கண்காணிக்கும் பணியில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்து மகாசபாவை சேர்ந்த ஆர்ய சமாஜ் திருமண அமைப்பு காதலர் தினம் கொண்டாடும் காதலர்களை திருமண மேடையில் அமர வைத்து திருமணம் செய்து வைப்போம் என்று அறிவித்துள்ளது. இதற்காக அன்றைய தினம் கையில் ரோஜாப்பூக்களுடன் தெரு முனையிலும், பூங்காக்கள், மால்களிலும் சுற்றித்திரியும் காதலர்களை குறி வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி இந்து மகா சபா தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் கூறியதாவது:–

காதலர் தினம் மேல்நாட்டு கலாச்சாரம். நமது நாட்டில் 365 நாட்களும் காதலுக்கு உகந்த நாள்தான். ஏன் மேல் நாட்டு வழக்கப்படி பிப்ரவரி 14–ந்தேதியை மட்டும் காதலர் தினமாக கொண்டாட வேண்டும்?…இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒருவருக்கொருவர் காதலில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும். அவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் ஊர் சுற்றுவதைத்தான் தடுக்கிறோம். அவர்களிடம் ஜாதி, மதம் பார்க்கவில்லை.இப்போது திருமணம் வேண்டாம், பிறகு திருமணம் செய்து கொள்ள நினைக்கும் காதலர்கள் பற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார். ஆக்ராவை சேர்ந்த இந்து மகாசபா பிரதிநிதி மகேஷ் சந்தனா கூறுகையில், நாங்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்வதை வரவேற்கிறோம். இந்தியாவில் குடியிருக்கும் அனைவரும் இந்துக்கள்தான். எனவே காதலர் தினத்தன்று பிடிபடும் காதலர்களை மணமேடையில் உட்கார வைப்போம் என்றார். இதுபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி