இது பா.ஜ.க.வில் உள்கட்சி குழப்பத்தை உருவாக்கி பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்க முடியாதபடி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய நிலையில் டெல்லியில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழ் புதிய கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. நேற்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு 36 முதல் 41 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 40 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 11 சதவீத வாக்குகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று 46 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த தடவை அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டேன். என்னை மன்னித்து மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று அவர் பிரசாரம் செய்து வருவதற்கு டெல்லி மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
டெல்லியில் அவர் செல்லும் இடங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தப்படி உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கு 27 முதல் 32 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 37 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ. க.வுக்கு கடந்த தேர்தலை விட கூடுதலாக 4 சதவீத ஓட்டுகள் கிடைத்தாலும் அது பெரும்பான்மை பலம் பெற கை கொடுக்காது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பா.ஜ.க. – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 14 தொகுதிகளில் வரும் வெற்றி – தோல்வியை பொருத்தே பா.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரிய வரும். இல்லையெனில் பா.ஜ.க. 27 முதல் 32 இடங்கள் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுவிடும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் கடைசி நிமிட பிரசாரத்தை பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். டெல்லி மக்களுக்கு செய்ய உள்ள திட்டங்கள் பற்றி இன்று பா.ஜ.க. புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது.
ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. – ஆம்ஆத்மி கட்சிகள் முட்டி, மோதிக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும் என்று அந்த கட்சி கூறி வருகின்ற போதிலும், காங்கிரசை டெல்லி மக்கள் கண்டு கொள்ளவே இல்லை. காங்கிரசுக்கு வெறும் 15 சதவீத ஓட்டுகளே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.இதன்படி பார்த்தால் 70 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 முதல் 7 இடங்கள் வரையே கிடைக்கும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத ஓட்டுகளை காங்கிரஸ் இழக்கும் நிலையில் உள்ளது. இதனால் மக்களை கவர வழி தெரியாமல் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திணறியபடி உள்ளனர்.டெல்லியில் உள்ள நடுத்தர மக்களின் ஆதரவு காரணமாகவே கெஜ்ரிவாலுக்கு மீண்டும் செல்வாக்கு ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கிரண்பேடியை விரும்பவில்லை. டெல்லி மக்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே கிரண்பேடி முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அஜய் மக்கானை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு டெல்லி மக்களில் 9 சதவீதம் பேர் ஆதரவே கிடைத்துள்ளது. கருத்து கணிப்புகளின் இந்த தகவல்களில் எவை– எவை பலிக்கும் என்பது வரும் 10ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி