சமீபத்தில் விமானம் விழுந்த இடத்திலிருந்து 1000 கி.மீ தொலைவில் இந்தோனேசியாவின் மையப்பகுதியில் உள்ள சுலவேசி தீவில் மீனவர்கள் மேலும் இருவரின் உடல்களை மீட்டனர். இதுவரை நடந்த தேடுதல் வேட்டையில் 72 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைத்தது. விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள ஒலிப்பதிவினை ஆய்வு செய்த இந்தோனேசிய விசாரணை அதிகாரிகள் இந்த வாரம் ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பில் தங்களின் முதல் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் இன்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், விமானம் விபத்துக்குள்ளாகும் போது அனுபவமிக்க இந்தோனேசிய விமானி இரியண்டோவுக்குப் பதிலாக பிரெஞ்சு துணை விமானி ரெமி ப்ளெசல் விமானத்தை ஓட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது. இன்னொரு விசாரணை அதிகாரியான எர்ததா லனங்கலியா, விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு 30 நொடிகளில் 32000 அடியிலிருந்து 37400 அடிக்கு உயர்ந்து திரும்ப 32000 அடிக்கு வந்து கிழே விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். உயரப் பறந்ததில் மின்னலை உருவாக்கும் மழை மேகங்களால் விமானத்திற்கு கடும் பாதிப்பு உண்டாகியிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேகங்களுக்கிடையில் விமானம் பயணித்ததா என்பதை விசாரணை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படாத நிலையில் இன்னும் ஏழு மாதங்களில் சமர்ப்பிக்கப்பட உள்ள இறுதி அறிக்கை பொது மக்களுக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி