இந்த பேச்சை கேட்டு மயங்கிய தமன், அந்த நம்பருக்கு மீண்டும் போன் செய்து அருந்ததியிடம் பேச ஆரம்பிக்கிறார். இருவரும் மாறி மாறி போன் செய்து பேசிக்கொள்கிறார்கள். இது நாளடைவில் இவர்களுக்குள் பார்க்காமலேயே காதலாக மாறுகிறது. அருந்ததியை நேரில் பார்த்து தன் காதலை சொல்ல ஆசைப்படுகிறார் தமன்.இந்நிலையில் அருந்ததி தன் தம்பியுடன் வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. இதில் படுகாயம் அடையும் தம்பியை மருத்துவமனையில் சேர்க்கிறார் அருந்ததி. தம்பியை காப்பாற்ற 30 லட்சம் செலவாகும் என்று டாக்டர் கூறுகிறார். இந்த பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் தவிக்கும் அருந்ததி, தமன் குமாரிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார். தன் பெயரில் இன்சூரன்ஸ் செய்திருப்பது அருந்ததிக்கு நினைவுக்கு வருகிறது. தான் விபத்தில் இறந்தால் அந்தப் பணம் தன் தம்பியின் உயிரை காப்பாற்ற உதவும் என்று நினைத்து சாலையில் விபத்தில் சிக்க முயற்சி செய்கிறார். தனது திட்டத்தின்படி தன் உயிரைக் கொடுத்து தன் தம்பியின் உயிரை காப்பாற்றினாரா?, தமன் குமார்-அருந்ததி காதல் கனிந்ததா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் தமன் குமார், எச்.ஆர். அதிகாரி கேரக்டருக்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறார். மென்மையான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். படம் முழுவதும் பார்மல்ஸ் உடையுடன் வந்து அழகாய் பளிச்சிடுகிறார். இப்படம் அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. நாயகி அருந்ததி வலுவான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படம் முழுக்க இவரைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது. இதனால், படம் முழுக்க இவருடைய கையே மேலோங்கி நிற்கிறது. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார் அருந்ததி.
தமனுக்கு நண்பனாக வந்து நகைச்சுவையால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார் பாலாஜி. பிற்பாதியில் வரும் வின்சென்ட் அசோகன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
வித்தியாசமான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் கேபிள் சங்கர், முதல் படம் என்று தெரியாத அளவிற்கு காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். போனில் காதல் செய்யும் காட்சிகள் பழைய படம் ஒன்றை ஞாபப்படுத்துகிறது. ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
பி.சி.சிவன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தொட்டால் தொடரும்’ அன்பு……….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி