செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…

இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!…

இந்திய பேட்மிண்டன்: சாய்னா, காஷ்யப் சாம்பியன்!… post thumbnail image
லக்னோ:-சயத் மோடி நினைவு சர்வதேச இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார். எதிர்பார்த்தது போலவே ஆட்டத்தில் நீயா-நானா என்று அனல் பறந்தது. முதல் செட்டில் 16-12 என்று முன்னிலை வகித்த சாய்னா அதன் பிறகு எதிராளியின் கை ஓங்க அனுமதித்து விட்டார். இதனால் முதல் செட்டை இழக்க நேரிட்டது. 2-வது செட்டில் தொடக்கத்தில் 10-6 என்று சாய்னா முன்னிலை வகிக்க, அதன் பிறகு இருவரும் மாறி மாறி சமநிலையை எட்டியபடி இருந்தனர்.

ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்புக்கு சென்ற சாய்னா இரண்டு முறை எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்டார். 2-வது செட்டை நீண்ட நேரம் போராடி வசப்படுத்திய சாய்னா கடைசி செட்டில், முன்பு போல் தவறு செய்யாமல் சுதாரித்து ஆடினார். ஒரு வழியாக 1 மணி 19 நிமிடங்களில் உலக சாம்பியனின் சவாலுக்கு முடிவு கட்டிய சாய்னா 19-21, 25-23, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த ஆண்டில் சாய்னாவின் முதல் மகுடம் இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் இந்திய வீரரான காமன்வெல்த் விளையாட்டின் சாம்பியன் காஷ்யப், சக நாட்டவர் ஸ்ரீகாந்துடன் கோதாவில் இறங்கினார். இதில் இருவரும் விடாப்பிடியாக போராடினர். இரு செட்டிலும் ஒரு கட்டத்தில் 21-21, 21-21 என்று வீதம் சமநிலை வந்தாலும், கடைசியில் அதிர்ஷ்டக்காற்று காஷ்யப் பக்கமே வீசியது. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் இறுதியில் காஷ்யப் 23-21, 23-21 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து பட்டத்தை சொந்தமாக்கினார். ஒற்றையர் சாம்பியன்கள் சாய்னா, காஷ்யப் ஆகியோருக்கு தலா ரூ.5½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்தவர்கள் ரூ.2¾ லட்சம் வீதம் பெற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி