அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 1800 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி: ஆணையத்திடம் 61 நிறுவனங்கள் விண்ணப்பம்…

1800 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி: ஆணையத்திடம் 61 நிறுவனங்கள் விண்ணப்பம்…

1800 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி: ஆணையத்திடம் 61 நிறுவனங்கள் விண்ணப்பம்… post thumbnail image
சென்னை :- மின்பற்றாக்குறையை ஈடுசெய்ய மாற்றுவழியாக சூரியசக்தி, காற்றாலை, சாணஎரிவாயு (பயோ-மாஸ்) ஆகியவற்றை உள்ளடக்கிய மரபுசாரா மின்உற்பத்தி பயன்படுகிறது. மரபுசாரா எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாட்டில் ஏராளமான வாய்ப்புகளும், தேவையான இயற்கை வளங்களும் உள்ளன.

இந்தியாவில் மரபுசாரா மின்சக்தி திட்டங்கள் மூலம் 24 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இதை இரண்டு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தி மூலம் 7,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சூரியமின்சக்தி கொள்கையின் அடிப்படையில், புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய அரசு கட்டிடங்களிலும் இதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் சூரிய மின்தகடுகள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சூரிய மின்தகடுகள் அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் வர்த்தகரீதியில் மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் வீட்டு கட்டிடங்களில் 1 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது என 2 முறைகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் சூரியசக்தி மூலம் 1,800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 61 நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளன. சூரியசக்தியை பயன்படுத்தி 2015-2016-ம் ஆண்டில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய சூரிய மின்சக்தி கொள்கை மூலம் இந்த இலக்கை அடைய முடியும்.

வீடுகளில் சூரிய மின்தகடுகள் அமைக்க ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு உரிமையாளர்கள் செலவிட வேண்டிவரும். சூரிய மின்சக்தி மூலம் ஒரு வீட்டுக்கு ஆண்டொன்றுக்கு 1,600 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ரூ.9,200 மின்கட்டணம் குறையும். வீடுகளில் முதல் ஆண்டில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சூரிய மின்தகடுகள் பொருத்துவதற்கான அனுமதியையும், மானியத் தொகை ரூ.10 கோடியையும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி