இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி தரப்பில் தொடக்க வீரர்களாக குப்டிலும், மெக்கல்லமும் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வாத்து நடை நடந்து வெளியேறினார் குப்டில். அடுத்து கேப்டன் வில்லியம்சன் மெக்கல்லத்துடன் ஜோடி சேர்ந்தார். அடுத்து வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 93 ரன்களில் தள்ளாடியது.
இந்நிலையில் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எல்லியாட்டும், 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஞ்சியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 50 ஓவர் முடிவில் இருவரும் இணைந்து 267 ரன்கள் குவித்து 6வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 360 ரன்கள் குவித்தது. ரோஞ்சி 170 ரன்களுடனும், எல்லியாட் 104 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
வெற்றிக்கு 361 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் திரிமன்னேவும், தில்ஷனும் களமிறங்கினர். திரிமன்னே நிதானமாக ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் தில்ஷன் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 93 ரன்களை குவித்த நிலையில் 45 ரன்னில் திரிமன்னே அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய சங்ககாரா 9 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஜெயவர்த்தனேவும் 30 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தில்ஷன் மட்டும் 116 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை மட்டுமே இலங்கை அணி எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை ரோஞ்சியும், எல்லியாட்டும் கூட்டாக பெற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி