செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…

கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…

கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!… post thumbnail image
ஜகார்த்தா:-இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. இந்த தேடுதல் வேட்டையில் சமீபத்தில் அவ்விமானத்தின் வால் பகுதி விழுந்துக் கிடந்த இடம் கண்டறியப்பட்டது.

விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்புப் பெட்டியும் இருக்கும் என்பதால் அதில் கருப்பு பெட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் கருவியை வைத்து இந்தோனேஷிய மீட்பு குழுவினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர். விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்புப் பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக தேடுதல் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்திருந்தார். நீர்மூழ்கி மூழ்கி மூலம் அப்பகுதியில் நீச்சல் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன் விளைவாக, கடலின் அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த விமானத்தின் வால்பகுதியை நேற்று மீட்ட வீரர்கள் அதனை கடலின் மேல்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தனர். மிதவை பைகள் மற்றும் ‘கிரேன்’ உதவியால் மீட்கப்பட்ட வால்பகுதி நீரின் மேற்பரப்பில் நின்றிருந்த மீட்பு கப்பலில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அதில் உள்ள கருப்புப் பெட்டியை கைப்பற்றினால் 162 உயிர்களை பலி வாங்கிய அந்த கோர விபத்துக்கு என்ன காரணம்?… என்ற மர்மம் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வால் பகுதியில் கருப்புப் பெட்டி காணப்படாததால் மீட்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், சோனார் கருவியை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் கடலுக்கடியில் 33 அடி நீளமும், 13 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட பாகம் கிடப்பது தெரியவந்துள்ளது. இது விமானத்தின் உடற்பகுதியாக இருக்கலாம் என மீட்பு படையினர் கருதினர். கருப்புப் பெட்டியும் அங்குதான் இருக்கும் என நம்பப்பட்டது. எனவே, குறிப்பிட்ட அப்பகுதியில் கடலுக்கு அடியில் நீந்தி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று வால் பகுதி கிடைத்த கடற்பகுதியில் கருப்புப் பெட்டியில் இருந்து கிடைக்கும் சமிக்ஞைகள் தொடர்ந்து கிடைத்து வந்ததால் மீட்புப் படையினர் அந்த இடத்தில் ஜல்லடை போட்டு ஜலிக்காத குறையாக அங்குலம் அங்குலமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்றிரவு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய அரசின் போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் டோன்னி புடியோனோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதற்கிடையில், இந்த விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? என்பது தொடர்பாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களில் ஏற்பட்டுள்ள சிதைவை ஆய்வு செய்து பார்த்த வகையில், கடல் பகுதியை நோக்கி வேகமாக கீழே இறங்கியபடி பறந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புவி ஈர்ப்பு விசையின் மாற்றத்தால் விமானத்தின் கேபின் பகுதியில் அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.அந்த அழுத்தத்தை சமன்படுத்துவதற்குள் தரையை நோக்கி பாய்ந்த விமானம் கடலின் மீது மோதி விழுந்ததில் அது வெடித்து சிதறியிருக்கலாம் என விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை தேடும் மற்றும் மீட்புப் படையின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி.சுப்ரியாடி கூறியுள்ளார். இதற்கு சான்றாக விமானத்தின் இடதுப் புற இறக்கை அதிகமாக சிதைந்துள்ளதையும், சம்பவ தினத்தன்று அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் பயங்கர வெடிச் சத்தத்தை கேட்டதாகவும், கடல் பகுதியின் மேற்பரப்பில் இருந்து புகை வந்ததை கண்டதாகவும் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி