இன்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. 230 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றிய கோலி மேலும் 7 ரன் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஹாரிஸ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். கோலி 230 பந்துகளில் 147 ரன் குவித்தார். இதில் 20 பவுண்டரிகள் அடங்கும். அப்போது ஸ்கோர் 352 ஆக இருந்தது. 6–வது விக்கெட் ஜோடி 160 ரன் எடுத்தது.அடுத்து அஸ்வின் களம் வந்தார். கோலியுடன் இணைந்து நிலைத்து நின்று நிதானமாக ஆடிய சகா 96 பந்தில் 35 ரன்னில் ஹாசில்வுட் பந்தில் ‘அவுட்’ ஆனார். மறுமுனையில் இருந்த அஸ்வின் பொறுப்புடன் ஆடினார். மதியஉணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 407 ரன் எடுத்து இருந்தது. அஸ்வின் 33 ரன்னிலும், புவனேஸ்வர்குமார் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இந்த ஜோடி தொடர்ந்து ரன்களை சேர்த்தது. லயன் இந்த ஜோடியை பிரித்தார். புவனேஸ்வர்குமார் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 8–வது விக்கெட் ஜோடி 65 ரன் எடுத்தது. மறுமுனையில் இருந்த அஸ்வின் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 24–வது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு இது 4–வது அரைசதம் ஆகும்.அடுத்த பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். கடைசியாக உமேஷ்யாதவ் ‘அவுட்’ ஆனார். இந்திய அணி 162 ஓவரில் 475 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைவிட 97 ரன் குறைவாகும்.97 ரன் முன்னிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த வார்னர் 4 ரன்னில் வெளியேறினார். ஆட்டத்தின் 2–வது ஓவரில் அஸ்வின் அவரை அவுட் செய்தார்.
2–வது விக்கெட்டுக்கு ரோஜர்சுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் இந்த ஜோடியையும் அஸ்வின் பிரித்தார். வாட்சன் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 46 ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு ரோஜர்சுடன் கேப்டன் சுமித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. ரோஜர்ஸ் 56 ரன்னும், சுமித் 71 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர்களில் ஜோபர்ன்ஸ் அதிரடியாக விளையாடி 39 பந்தில் 66 ரன் (8 பவுன்டரி, 3 சிக்சர்) எடுத்து வெளியேறினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்து இருந்தது. முதல் இன்னிங்கில் பெற்ற கூடுதல் ரன் மூலம் அந்த அணி 348 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அஸ்வின் 4 விக்கெட்டும், புவனேஸ்வர்குமார், முகமதுஷமி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி