1. ஐ :-
விக்ரமின் கடும் உழைப்பில் உருவான 3 வித்தியாசமான கெட்அப், ஏ.ஆர்.ரஹ்மானின் சூப்பர்ஹிட் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் வியக்க வைக்கும் ஒளிப்பதிவு, ஹாலிவுட் டெக்னீஷியன்களின் கிராஃபிக்ஸ், மேக்அப் உள்ளிட்ட விஷயங்கள் என ‘ஐ’யைப் பார்த்து ஆச்சிரியப்படுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் காத்திருக்கின்றன. இப்படத்தின் டீஸர், டிரைலர் இந்திய அளவில் பெரிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. என்னை அறிந்தால் :-
கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்முறையாக அஜித், கௌதம் – ஹாரிஸ் மீண்டும் கூட்டணி, ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டாக் மெக்கார்தரின் ‘டாப் நோட்ச்’ ஷாட்ஸ், அருண் விஜய்யின் வில்லன் வேடம், நாயகிகளாக அனுஷ்கா, த்ரிஷா என ‘என்னை அறிந்தால்’ படத்தின் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ஏற்கெனவே வெளிவந்த இப்படத்தின் டீஸருக்கும், புத்தாண்டு அன்று வெளிவந்த டிரைலருக்கும் கிடைத்த வரவேற்பே இப்படத்தை ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு சான்று! அதோடு ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பொங்கலுக்கே வெளியாகவேண்டிய படம் கொஞ்சம் தள்ளி வரும் 29ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. விஜய் 58 (எ) புலி :-
‘ஃபேன்டஸி’ புகழ் சிம்புதேவனின் இயக்கத்தில் விஜய் முதன் முதலாக நடிக்கும் படம் என்பதோடு இப்படத்தின் வித்தியாசமான கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை இப்படத்தின் மீது ஏற்படுத்தியிருக்கிறது. மன்னர் யுகம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் இப்படத்தின் கதைக்களம் நடப்பதாகவும், அதில் விஜய் ‘குள்ள மனிதர்’, மாடர்ன் யூத் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் நடிக்க, ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
4. மாஸ் :-
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூர்யா என புதுக்கூட்டணி கைகோர்த்திருப்பதால் ‘மாஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பது உண்மை. அதோடு இப்படம் வித்தியாசமான ஹாரர் படம் என்பதும் இன்னொரு ப்ளஸ். சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா ஆகியோர் நடிக்க முக்கிய வேடங்களில் ஜெயராமும், சமுத்திரக்கனியும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் யுவன் ஷங்கர் ராஜாவே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. படம் வரும் சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. விஸ்வரூபம் 2 :-
முதல் பாகத்தின் அதிரிபுதிரி வெற்றியால் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என உலகநாயகன் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே காத்திருக்கிறார்கள். ஒரு சில பேட்ச் ஒர்க்குகளும், டப்பிங், சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இன்னமும் மீதமிருப்பதால் இப்படம் எப்போது வெளிவரும் என்பது கமலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். முதல் பாகத்தைவிட இப்படத்தில் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
6. அனேகன் :-
சென்னையின் தேசியகீதமாக தெருவெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது ‘அனேகனி’ன் ‘டாங்கா மாரி’ பாடல்! முதல்முறையாக கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதும், அவரது வித்தியாசமான 4 கெட்அப்களும் இப்படத்திற்கான எதிர்பார்ப்புக்கு காரணம். அதோடு 2014ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான ‘வேலையில்லா பட்டதாரி’யைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வரும் படம் என்பதும் கூடுதல் காரணம். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாரில் ‘யு’ சான்றிதழும் வாங்கி ரிலீஸுக்கு ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ‘ஐ’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையை ‘அனேகன்’ தயாரிப்பாளர்களான ‘ஏஜிஎஸ்’ நிறுவனத்தார் வாங்கியிருப்பதால் ‘ஐ’ வெளியாகி 1 மாத காலத்திற்கு பின்பே ‘அனேகன்’ வெளியாக வாயப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
7. கொம்பன் :-
‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கிராமத்தில் களமிறங்கியிருக்கிறார் கார்த்தி. ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கும் இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கிறார். இசை வெளியீடு, சென்சார் வேலைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம்.
8. வாலு :-
‘வாலு’ படம் ரிலீஸாகும் என கடந்த 3 வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். 2012ஆம் ஆண்டு ‘தீபாவளிக்கு வர்றேன்’ என்று சொன்னார் சிம்பு… 2015ஆம் ஆண்டு பொங்கலே வந்துவிட்டது… ஆனாலும் படம் வந்தபாடில்லை. படம் முடிந்து தற்போது ரிலீஸுக்கு ரெடியாக இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் ஜனவரி 29ஆம் தேதி அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ வெளியாகவிருப்பதால் மறுபடியும் ‘வாலு’வின் ரிலீஸ் தேதி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
9. காக்கி சட்டை :-
2014ல் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படம் முன்னணி நடிகர்களின் படத்திற்கு இணையாக பிசினஸ் செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை வேறு யாரும் எட்டியிருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தர ரசிகர்களையும் சிவகார்த்திகேயன் கொண்டிருப்பதால் அவரின் அடுத்த வரவான ‘காக்கி சட்டை’க்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்கம் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார், இசை அனிருத் என ‘எதிர்நீச்சல்’ வெற்றிக்கூட்டணி இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். தனுஷ் தயாரிப்பு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவன வெளியீடு என்பது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படமும் ரிலீஸ் தேதியை மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
10. நானும் ரௌடிதான் :-
தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி என்பதோடு, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதும் இப்படத்தின் எதிர்பார்ப்பிற்கு மிக முக்கிய காரணம். கூடவே அனிருத்தும் சேர்ந்துகொண்டால் சொல்லவும் வேண்டுமா? தனது கேரியரில் மிக முக்கியமான படமாக ‘நானும் ரௌடிதானை’ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. தற்போது படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் இப்படத்தை ‘போடா போடி’ விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த ஆண்டின் மத்தியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட படங்களைத் தவிர்த்து பாலாவின் ‘தாரை தப்பட்டை’, மணிரத்னத்தின் ‘ஓ.கே. கண்மணி’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’, விஷாலின் ‘ஆம்பள’, சண்டைக்கோழி 2, சுசீந்திரன் இயக்கும் படம், ராகவா லாரன்ஸின் ‘கங்கா ’ (முனி 3), ஆர்யாவின் ‘யட்சன்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ஜோதிகாவின் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ ரீமேக், ‘ஜெயம்’ ரவியின் ‘பூலோகம்’, ‘தனி ஒருவன்’, ‘அப்பா டக்கர்’, ஜீவா – நயன்தாரா நடிக்கும் படம், மாதவனின் ‘இறுதிச்சுற்று’ கார்த்திக் சுப்பாராஜின் ‘இறைவி’, நலன் குமாரசாமியின் ‘கை நீளம்’, அனுஷ்காவின் ‘ருத்ரம்மா தேவி’, ‘மஹாபலி’, பிரசாந்தின் ‘சாகஸம்’, கவுண்டமணியின் ‘வாய்மை’, ‘49ஓ’ உட்பட இன்னும் சில முக்கிய படங்கள் இந்த வருடம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி