ஆனால் ராஜபக்சே கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சுகாதார மந்திரி மைத்ரிபால சிறீசேனா விலகி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கியதால் இலங்கை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 19 பேர் போட்டியிடுகிறார்கள். என்றாலும் ராஜபக்சேக்கும் சிறீசேனாவுக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த ஒரு மாதமாக அவர்கள் இருவரும் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கு பிரசாரம் ஓய்ந்தது. இன்று காலை 7 மணிக்கு இலங்கை அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. இலங்கையில் சுமார் 1½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து வாக்களிப்பதற்காக இலங்கை முழுவதும் 1076 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் காலை 7 மணி முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழர்கள் வாழும் பகுதியை விட சிங்களர்கள் வாழும் பகுதிகளில் அதிக விறுவிறுப்பு காணப்பட்டது. தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக 1076 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 70 ஆயிரம் அதிகாரிகள் துணையுடன் இன்றைய தேர்தல் நடந்து வருகிறது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் ராணுவ வீரர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இன்று பிற்பகல் 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு ஓட்டுப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.இன்றிரவு 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். மண்டலம் வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்பது நாளை அதிகாலை தெரிந்து விடும். பதிவான மொத்த ஓட்டுக்களில் 50 சதவீத வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்காவிட்டால் மீண்டும் இரண்டாம் சுற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு புதிய அதிபர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
இலங்கையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சிங்களர்கள் 70 சதவீதம், தமிழர்கள் 12 சதவீதம், முஸ்லிம்கள் 9 சதவீதம் உள்ளனர். இவர்களில் சிங்களர்களின் ஆதரவு ராஜபக்சேக்கும் சிறீசேனாவுக்கும் சமமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழர்கள், முஸ்லிம்கள் ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டுக்களாக இருக்கும் என்று தெரிகிறது.எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறீசேனாவுக்கு தமிழர்கள், முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு உள்ளது. மேலும் 35 கட்சிகள் சிறீசேனாவை ஆதரிக்கின்றன. என்றாலும் விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் அழித்தவர் என்பதால் ராஜபக்சேக்கு சிங்களர்களிடம் அபரிதமான ஆதரவு உள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி