இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். சுமித் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 168 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சுமித்தின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருக்கிறது. இந்த தொடரில் அவர் அடித்த 4–வது சதம் இதுவாகும்.
இதன் மூலம் சுமித் புதிய சாதனை படைத்தார். ஒரு தொடரில் தொடர்ந்து 4 சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த காலிஸ் ஒருவர் மட்டும் தான் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் 4 போட்டியிலும் சதம் அடித்து இருந்தார். இன்று அவரை சுமித் சமன் செய்தார்.அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் 162 ரன்னும், பிரிஸ்பேனில் நடந்த 2–வது டெஸ்டில் 133 ரன்னும், மெல்போனில் நடந்த 3–வது டெஸ்டில் 192 ரன்னும் எடுத்தார். தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் 4–வது டெஸ்டிலும் சுமித் செஞ்சுரி அடித்து முத்திரை பதித்தார். 26–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8–வது சதம் ஆகும். சுமித்–வாட்சனின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவின் ரன் மளமளவென்று உயர்ந்தது. 106.4–வது ஓவரில் அந்த அணி 400 ரன்னை தொட்டது.
அடுத்த ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. வாட்சன் 81 ரன்னில் முகமது ஷமி பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 400 ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 196 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஷான்மார்ஷ் களமிறங்கினார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த சுமித் 117 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 415 ஆக இருந்தது. 5–வது விக்கெட் ஜோடியான மார்ஷ்–பர்ன்ஸ் ஜோடியும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதனால் 142.1 ஓவரில் ஆஸ்திரேலியா 500 ரன்னை குவித்தது. மார்ஷ் 73 ரன்னும், ஜோபர்ன்ஸ் 58 ரன்னும் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹாரிஸ் 9 ரன்னில் அவுட்டாகாமல் இருக்க, ஹாரிஸ் 9 பந்தில் 25 ரன்கள் குவித்து அவுட்டானார். இதையடுத்து 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் விஜய் டக் அவுட்டாகி வெளியேறினார். காலை 11.00 மணி நிலவரப்படி இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் பொறுமையுடன் விளையாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி