இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் வெற்றி பெற்றிருந்தார். அதனால் இலங்கையின் தெற்கு பகுதியில் வாழும் சிங்களர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. அதனால் மிக சுலபமாக வெற்றி பெற்று விட்டார். ஆனால் இந்த தடவை அவரது செல்வாக்கு சிங்களர்களிடையே குறைந்து விட்டது. மேலும் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா என்ற சிங்களரே போட்டியிடுகிறார். அதனால் இந்த தடவை சிங்களர்களின் ஓட்டு 2 ஆக பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வடக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் தமிழர்களிடையேயும் ராஜபக்சேவுக்கு அதிக அளவு ஆதரவு இல்லை. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை ராஜபக்சேவின் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது ஒருபுறம் இருக்க இறுதி கட்ட போர் முடிந்த பிறகு தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரோடுகள், குடிநீர் வசதி, மின்சாரம், ரெயில் போக்குவரத்து போன்றவை செய்து தந்துள்ளதாக ராஜபக்சே தெரிவிக்கிறார்.
ஆனால் அதை தமிழர்கள் முழுமையாக ஏற்கவோ, நம்பவோ தயாராக இல்லை. போர் முடிந்த பிறகும் தமிழர்கள் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு முகாமிட்டுள்ளது. மேலும் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.வடக்கு மாகாண கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தியும் உரிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசியல் உள்ளிட்ட அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு கேள்விக் குறியாக உள்ளது. தற்போதைய நிலை இவ்வாறு இருக்க தேர்தலில் வாக்களித்து ராஜபக்சே வெற்றி பெற்று விட்டாலும் இதே நிலைதான் தொடரும். நிலைமை மாறப்போவதில்லை என வடக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் கருதுகின்றனர். இதனால் ராஜபக்சேவுக்கு அங்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சீறிசேனாவுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்றும் திட்டவட்டமாக தெரியவில்லை. ஏனென்றால் இவரும் ராஜபக்சே அரசில் மந்திரியாக இருந்தவர். இறுதி கட்ட போரை ராஜபக்சேவுடன் சேர்ந்து நடத்தியவர். ஆனால் இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் தமிழர்களின் ஆதரவு நிலை என்ன என்பது தேர்தலுக்கு பிறகே தெரிய வரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி