இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை ஆடியது. இன்றும் வழக்கம் போல் வார்னரின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. எனினும் வார்னரை 40 ரன்னில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அப்போது ஸ்கோர் 57 ஆக இருந்தது.2–வது விக்கெட்டுக்கு ரோஜர்சுடன், வாட்சன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. ரோஜர்ஸ் 33 ரன்னும், வாட்சன் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. 1½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 3–வது ஓவரில் இஷாந்த் சர்மா 2–வது விக்கெட் ஜோடியை பிரித்தார். அவரது பந்தில் வாட்சன் 17 ரன்னில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 98 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் சுமித் களம் வந்தார். 25.4–வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னை தொட்டது. ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி 81 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இந்த தொடரில் அவர் அடித்த 4–வது அரை சதம் ஆகும். ஒட்டு மொத்தமாக 8–வது அரை சதத்தை எடுத்தார்.
முதல் இன்னிங்சில் 192 ரன் குவித்த சுமித் இந்த முறை 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை உமேஷ்யாதவ் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 131 ஆக இருந்தது. அதை தொடர்ந்து ரோஜர்ஸ் 69 ரன்னில் அஸ்வின் பந்திலும், ஜோ பர்ன்ஸ் 9 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். ஆஸ்திரேலியா 54.4–வது ஓவரில் 200 ரன்னை தொட்டது. 6–வது விக்கெட்டாக ஹாடின் ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்களே எடுத்தார். உமேஷ் யாதவ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 202 ஆக இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மிட்சல் ஜான்சனும் 15 ரன்னில் நடையை கட்டினார். இன்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. அப்போது மார்ஷ் 62 ரன்களுடனும், ஹாரிஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி