செய்திகள்,விளையாட்டு முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!… post thumbnail image
அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன் எடுத்தது. 73 ரன்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்து இருந்தது. வார்னர் மீண்டும் சதம் அடித்தார். கரண்சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார். இன்று 5–வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது.

ஆஸ்திரேலிய அணி நேற்றைய ரன்னுடன் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு (98 ஓவர்) நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக இருந்தது. ஜான்சன் ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. தவான் 9 ரன்னில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 16ஆக இருந்தது.அடுத்து களம் வந்த புஜாராவும் நீண்ட நேரம் களத்தில் இருக்கவில்லை. லயன் பந்தில் அவர் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 57ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு முரளி விஜய்யுடன், கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிகையுடன் ஆடியது. குறிப்பாக கோலி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இருவரும் அதிரடியாக ஆடி தங்கள் சதத்தை நோக்கி நெருங்கி வந்தனர். முதலில் கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் துரதிருஷ்டவசமாக 99 ரன்னில் அவுட்டானார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கோலி மட்டும் நம்பிக்கை தரும் வகையில் ஆடி வந்தார். இந்த நிலையில் லயன் பந்தை தூக்கியடிக்க ஆசைப்பட்டு டீப் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த மார்ஷிடம் கேட்ச் கோடுத்து 141 ரன்னில் கோலி அவுட்டானார். அதன் பின் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப இந்திய அணி 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இரண்டாவது இன்னிங்சிலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஹியூக்ஸ் மறைவு ஆஸ்திரேலிய வீரர்களின் விளையாட்டு திறமையை பாதிக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி