செய்திகள்,திரையுலகம் ர (2014) திரை விமர்சனம்…

ர (2014) திரை விமர்சனம்…

ர (2014) திரை விமர்சனம்… post thumbnail image
அஷ்ரஃப்யும் அதிதி செங்கப்பாவும் உயிருக்கு உயிரான காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான அதே நாள் இரவில் அதிதி செங்கப்பா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. தன் மனைவியின் நினைவுகளுடன் அந்த வீட்டில் வாழும் அஷரஃப் சில அமானுஷ்ய சம்பவங்களுக்கு ஆளாக, அது தன் மனைவி என்று நினைக்கிறார். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற சில திகில் சம்பவங்கள் அஷ்ரஃபை துரத்திக் கொண்டிருக்க, நிலை குலைந்து போகும் அஷரஃப் தன் தாய், அக்கா, அவரது குழந்தையுடன் வேறு வீட்டில் குடி அமர்கிறார்கள். அங்கும் சில துர் சம்பவங்கள் தொடர்கின்றன. இப்படியெல்லாம் நடப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய அஷரஃப் முயற்சிக்கும்போது அவர் எதிர்கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள்தான் ‘ர’.

திகில் படத்துக்கே உரிய பரபரப்பு கொஞ்சம் குறைவாக இருந்தாலும், சொல்ல வந்த கதையை தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ். பேய்ப் படங்களுக்கே உண்டான சில டெம்ப்ளேட் விஷயங்கள் இப்படத்திலும் இருக்கின்றன. ஆனாலும், ஹிப்நாட்டிஸம் மூலம் ஹீரோவை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்வது, அங்கு அவர் ரெட் டோரை பார்ப்பது, அதனால் ஏற்படப்போகும் பேரழிவுகள், விளைவுகள் என படத்தில் சில புதிய விஷங்களையும் முயற்சி செய்திருக்கிறார்கள். பாடல்களை அதிகம் பயன்படுத்தாததும், 2 மணி நேரத்திற்குள்ளாக படத்தை முடித்திருப்பதும் பலம். ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்றவை ‘ர’வில் ரகளை செய்திருக்கின்றன. படத்தின் மைனஸ் என்று பார்த்தால், மெதுவாக நகரும் திரைக்கதையையும், குறும்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு தரும் சில காட்சிகளையும் சொல்லலாம். அதேபோல் சில இடங்களில் லாஜிக்கையும் சரியாகக் கையாளவில்லை. இருந்தபோதிலும் பேய்ப்படம் என்றாலே ரத்தம், கோரம், தேவையில்லாத காமெடி என்ற டிரென்டிலிருந்து வெளியே வந்து வேறொரு கோணத்தில் யோசித்திருப்பது பாராட்டுக்குரியது.

ஹீரோவாக நடித்திருக்கும் அஷ்ரஃபுக்கு படம் முழுக்க தனது பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தக்கூடிய அருமையான கேரக்டர்! சந்தோஷம், துக்கம், ஆக்ரோஷம் என புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு தன் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ‘ரெனியா’வாக வரும் அதிதி செங்கப்பாவுக்கு வாய்ப்புக் குறைவு என்றாலும், கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார், அஷ்ரஃபின் நண்பராக படம் முழுக்க வரும் லாரன்ஸ் ராமு, போலீஸ் அதிகாரியாக வரும் ஜெய், அஷரஃபின் தாயாக வரும் கீதா பாபு, சகோதரியாக வரும் ரித்திகா என படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘ர’ வித்தியாசமான முயற்சி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி