நல்ல பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்தாலும் கடந்த காலங்களில் அணிக்கு அளித்த அளப்பரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு தங்களுக்கு உத்தேச அணியில் இடம் கிடைக்கும் என்று நப்பாசையுடன் காத்து இருந்தனர். ஆனால் தேர்வாளர்களின் ‘இளம்படை தேவை’ என்ற அதிரடி முடிவால் சீனியர் வீரர்களின் கனவு கோட்டை நேற்று முற்றிலும் தகர்ந்து போனது.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இடம் பிடிக்க முடியாமல் போனதன் மூலம் சீனியர் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்திய அணிக்கு மறுபிரவேசம் செய்யலாம் என்று காத்து இருந்த அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதப்படுகிறது. கடந்த உலக கோப்பையில் இடம் பிடித்து, தற்போதைய இந்திய உத்தேச அணியில் இடம் கிடைக்காத வீரர்களை பற்றிய அலசல் வருமாறு:-
யுவராஜ்சிங்:
32 வயதான யுவராஜ்சிங் கடந்த உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டவர். அதில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 362 ரன்கள் சேர்த்து இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றியிலும் அணிக்கு முதுகெலும்பாக விளங்கியவர். கடைசியாக 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ்சிங் ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வால் அதன் பிறகு அணிக்கு திரும்பவில்லை. அத்துடன் அவர் உள்ளூர் போட்டியிலும் பெயர் சொல்லும்படியாக விளையாடவில்லை.
ஷேவாக்:
கடந்த உலக கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி 380 ரன்கள் திரட்டியவர் ஷேவாக். உத்தேச அணியில் இடம் கிடைக்கும் என்று நம்புவதாக கருத்து தெரிவித்து இருந்த இரு தினங்களுக்குள் அவருக்கு பேரிடி விழுந்துள்ளது. 36 வயது அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் கடந்த 2 ஆண்டுகளாவே இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். அத்துடன் அவர் உள்ளூர் போட்டிகளிலும் சோபிக்கவில்லை.
கவுதம் கம்பீர்:
கடந்த உலக கோப்பை போட்டியில் 9 ஆட்டங்களில் ஆடி 393 ரன்கள் குவித்தவர் கம்பீர். குறிப்பாக இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் 97 ரன்கள் விளாசி கோப்பையை இந்திய அணி கையில் ஏந்த காரணமாக இருந்தார். 33 வயதான அவர் 2013-ம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் நடந்த இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அந்த டெஸ்டில் அவர் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை.
ஹர்பஜன்சிங்:
சென்னை உலக கோப்பையில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. 34 வயதான அவர் உள்ளூர் போட்டிகளில் ஓரளவு நன்றாக செயல்பட்டாலும் இளம் வீரர்களின் சுழலை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து விட்டார் எனலாம்.
ஜாகீர்கான்:
கடந்த உலக போட்டியில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 36 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உடல் தகுதி பிரச்சினையால் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு இந்திய ஒரு நாள் போட்டி அணியில் கால் பதிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆசிஷ் நெஹரா, முனாப்பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா, ஆல்-ரவுண்டர் யூசுப்பதான் உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டவர்களில் எஞ்சிய வீரர்கள் ஆவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி