செய்திகள்,திரையுலகம் புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…

புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…

புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
கோவில் பூசாரியான நாயகன் மிதுன், தனக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தபோதும், ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அத்துடன், சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று கனவோடும் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் சாமியார் ஒருவரிடம் பணக்காரணாக வேண்டும் என்று யோசனை கேட்க, அதற்கு அவர் உனக்கு அடுத்த வாரிசு ஆண் குழந்தை பிறக்கும், அவன் பிறந்த பிறகு நீ பணக்காரன் ஆவாய் என்று கூறுகிறார். அப்படி பெண் குழந்தை பிறந்தால் உனக்கு ஆபத்து என்று கூறுகிறார். இதைக் கேட்ட மிதுன், ஆண் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இதற்கிடையில், திருமணமாகி நீண்ட வருடங்களாக கிறிஸ்துவ தம்பதி ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வருத்தப்பட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் மந்திரவாதி ஒருவன், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தையைப் பலி கொடுத்து புதிய சக்தியை பெறும் திட்டத்துடன் காத்திருக்கிறான்.மிதுனுக்கு அடுத்ததும் பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் மிகவும் வருத்தமடையும் அவர், தனக்கு எமனாக வந்துவிட்டதே என்று எண்ணி, அந்த பெண் குழந்தையை வெறுக்கிறார். ஒருநாள் ஜோதிடர் ஒருவர், இந்தப் பெண் குழந்தையால் உன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறி மீண்டும் வெறுப்பேற்றுகிறார். இதனால், அந்தக் குழந்தையை கொல்ல முயற்சி செய்கிறார் மிதுன். இரண்டு முறை முயற்சி செய்தும் குழந்தை பிழைத்துக்கொள்கிறது.

ஒருநாள் குடும்பத்துடன் பீச்சுக்கு செல்கிறார் மிதுன். அங்கு கடைசி குழந்தை காணாமல் போகிறது. மிதுனும் அவரது மனைவி மான்ஸியும் குழந்தையைத் தேடி அலைகிறார்கள். அதேசமயம், கிறிஸ்துவ தம்பதியின் காரில் இருக்கும் அந்தக் குழந்தையை பார்த்த அவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த குழந்தையை வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். மறுபக்கம் மந்திரவாதி இந்தக் குழந்தையை பலி கொடுக்க ஆட்களை வைத்து கடத்த முயற்சி செய்து வருகிறான்.இறுதியில் அந்தக் குழந்தையை தொலைத்த மிதுன், மான்ஸி தம்பதியிடம் சென்றதா? கிறிஸ்துவ தம்பதிகள் வளர்த்தார்களா? அல்லது மந்திரவாதி குழந்தையை பலி கொடுத்தானா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மிதுன், பூசாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால், இவருடைய காமெடியான நடிப்பு எடுபடவில்லை. காமெடி என்று இவர் செய்யும் நடிப்பு ரசிகர்களை கடுப்பேத்துகிறது.

நாயகி மான்ஸி, மடிசார் புடவையில் மனதை கவர்கிறார். முதல் பாதியில் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் குழந்தைக்காக ஏங்குவதும் என்று சிறப்பாக நடித்திருக்கிறார். கிறிஸ்துவ தம்பதிகள், மந்திரவாதி, சிறு குழந்தைகள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக எடுத்துக்கொண்ட இயக்குனர் ரஞ்சித் போஸ், அதில் தெளிவான திரைக்கதை அமைக்காததே வருத்தமளிக்கிறது. படத்தில் தேவையற்ற நிறைய காட்சிகளை தவிர்த்திருக்கலாம். எல்வி கணேசனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கபில் கே கவுதமனின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியாக இல்லை.

மொத்தத்தில் ‘புளிப்பு இனிப்பு’ கசப்பு………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி