செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு post thumbnail image
புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான, பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு கூறியுள்ளது. இதையடுத்து, மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.கடந்த, 2013ல், ஆறாவது ஐ.பி.எல்., தொடரின்போது நடந்த, ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து, சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, 35 பக்க இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட, 13 பேரில், வீரர்களை தவிர்த்து, நான்கு பேரின் செயல்பாடு குறித்த விவரத்தை மட்டும், முன்பு, கோர்ட் வெளியிட்டிருந்தது. மேலும், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா ஆகியோர் அடங்கிய, ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் என, முத்கல் குழு அறிக்கையில் குறிப்பிட்டதை ஏற்கிறோம்’ என, பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ கூறியதாவது:

பி.சி.சி.ஐ., விதிமுறைப்படி, சென்னை அணி பல முறைகேடுகளில் ஈடுபட்டது முத்கல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. இதுவே போதுமான ஆதாரமாக இருப்பதால், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். சீனிவாசனுக்கு முக்கியமானது, அவரது தலைவர் பதவியா அல்லது சென்னை அணியா? இவர், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருப்பது தெளிவாகிறது. சென்னை அணியை வாங்க, 400 கோடி ரூபாய் முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார், சென்னை அணி மற்றும் சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். குருநாத்திற்கு தொடர்பு இல்லை என்றால், அணியின் உரிமையாளர் யார், வீரர்களை தேர்வு செய்தது கம்பெனியா, அணியை கட்டுப்படுத்தியது யார் என்பது போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். திட்டமிட்டபடி வரும் டிச., 17ல், பி.சி.சி.ஐ.,யின் பொதுக்குழுவை நடத்தலாம். புதிதாத தேர்தல் நடத்தி, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யலாம். இதில், முத்கல் குழுவால், குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் இடம்பெறக் கூடாது. இவ்வாறு, ‘ஸ்பெஷல் பெஞ்ச்’ தெரிவித்தது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் டிச., 1ல் நடக்கும்.

தோனிக்கு, ‘கிடுக்கிப்பிடி!’:

முத்கல் குழு விசாரணையில், ‘குருநாத் மெய்யப்பன், அணி நிர்வாகி அல்ல’ என, சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். தற்போது, ‘குருநாத் நிர்வாகி தான்’ என, பி.சி.சி.ஐ., கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், விசாரணையில் பொய்யான தகவல் தெரிவித்த தோனிக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது. தவிர, இவர், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இதுகுறித்து நேற்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், ‘சென்னை அணி கேப்டன், இந்தியா சிமென்ட் நிறுவன ஊழியர் என, இரண்டு பதவிகளை தோனி வகிப்பது, பெரும் கவலை தருகிறது’ என தெரிவித்துள்ளது.

சென்னை அணிக்கு ஆபத்து:

ஐ.பி.எல்., தொடர் விதிமுறைப்படி, அணி உரிமையாளர்கள், ‘பெட்டிங், பிக்சிங்’ செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது. இதை மீறும் பட்சத்தில், அந்த அணி தொடரில் இருந்து நீக்கப்படும். முத்கல் அறிக்கையில், ‘குருநாத் மெய்யப்பன், ‘பெட்டிங்’கில் ஈடுபட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் என, பி.சி.சி.ஐ., தற்போது கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி, சென்னை அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்கல் அறிக்கையில் சீனிவாசன் பெயரும் இடம் பெற்றிருப்பதால், அவர் மீண்டும், பி.சி.சி.ஐ., தேர்தலில் போட்டியிட முடியாது.

சேர் வாடகை ரூ.1,600:

பி.சி.சி.ஐ., நிர்வாகம் குறித்து லலித் மோடி கூறுகையில்,”ஒவ்வொரு மாநில சங்கங்களுக்கும் ரூ.50, 60 மற்றும் 70 கோடி வரை உதவித் தொகை தருகின்றனர். இங்கு தான் பிரச்னையே துவங்குகிறது. இந்தப் பணம் எப்படி செலவாகிறது என்பதை வருமான வரித்துறையினர் விசாரிக்க வேண்டும். பெரும்பாலான பணத்தை அப்படியே ஒதுக்கிக் கொள்கின்றனர். சேர் ஒன்றுக்கு வாடகை ரூ.1,600 வரை தருகின்றனர்,” என்றார்.

நடவடிக்கை எடுப்போம்:

பி.சி.சி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ‘எங்கள் தரப்பில் ஒரு குழு அமைத்து, முத்கல் கமிட்டியில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்போம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?:

ஐ.பி.எல்., தொடரில், ‘சென்னை சூப்பர்கிங்ஸ்’ வெற்றிகரமான அணியாக திகழ்ந்தது. இதுவரை நடந்த, ஏழு தொடர்களில், 2010, 2011ல் சாம்பியன் ஆனது. மற்ற, ஐந்து தொடர்களிலும், அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் 2010, 2014ல் சாம்பியன், 2013ல் அரையிறுதி என அசத்தியது. சென்னை அணி நீக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடர் விறுவிறுப்பாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலாக, புதிதாக வரும் அணி எது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி நீக்கப்பட்டால், இந்த அணியின் தோனி, ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், அடுத்த ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இவர்கள் எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இதுவரை நீக்கப்பட்ட அணிகள்:

ஐ.பி.எல்., தொடர் 2008ல் துவங்கப்பட்ட போது, எட்டு அணிகள் இருந்தன. 2011ல் கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. பின், மூன்று அணிகள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டன.

இதன் விவரம்:

அணி உரிமையாளர்கள் விவரத்தை சரியாக தெரிவிக்கவில்லை என்ற காரணத்துக்காக, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 2011, செப்., 19ல் நீக்கப்பட்டது. வீரர்களுக்கு சம்பளம் தராத நிலையில், அணியை விற்க முன்வராத டெக்கான் சார்ஜர்ஸ் அணி உரிமம், 2012, செப்., 14ல் ரத்தானது. பின், இது ஐதராபாத் பெயரில் தற்போது தொடரில் பங்கேற்கிறது. பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட நிதி நிர்வாக குளறுபடிகளால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக, 2013, மே 21ல், புனே அறிவித்தது. ஐந்து மாதத்துக்குப் பின், அக்., 26ல் அணி உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, ‘பெட்டிங்’ பிரச்னையில் சிக்கியுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமம் ரத்தாகும் என்று தெரிகிறது.

வெட்ட வெளிச்சமானது:

சுப்ரீம் கோர்ட் விளாசியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில், ”இவ்வளவு விஷயங்கள் நடந்த பின்பும், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டும். பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு, நிர்வாக பதவிகளில் உள்ளவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பலரும் ஆதாயம் தரும் வகையில் இரண்டு பொறுப்புகளில் உள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது,” என்றார்.

எங்களது தவறு தான்:

தடை செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறியது: சென்னை அணியை சீனிவாசன் வாங்க அனுமதித்த விஷயத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம். இதில், ஆதாயம் தரும் வகையில் அணியை வைத்திருப்பது குறித்து பிரச்னை ஏற்படும் என, உணர்ந்திருந்தோம். இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை நீக்கி, மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஐந்து ஆண்டுக்குப் பின், இப்படி பிரச்னை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டர். முத்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைவரும், அடுத்து கிரிக்கெட்டில் பங்கேற்கக் கூடாது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுதான் சரியான முடிவு. மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு, லலித் மோடி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி