சர்வதேச போட்டிக்கு ஏற்ப எனது ஆட்ட தரத்தை உயர்த்த முடியுமா? என்ற கேள்வியும் மனதில் உதித்தது. பாகிஸ்தானின் அதிவேக பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதே எனது அறிமுக போட்டியின் முக்கியத்துவமாகும். வாசிம் அக்ரம் வீசிய ஓவரின் 3-வது பந்தை நான் எதிர்கொண்டேன். அந்த பந்து பவுன்சராக வந்தது.அடுத்த பந்தை அவர் யார்க்கராக வீசுவார் என்று கணித்து அதற்கு தக்கபடி மனரீதியாக தயாரானேன். ஆனால் அந்த ஓவரில் எஞ்சிய பந்துகள் அனைத்தையும் வாசிம் அக்ரம் பவுன்சராகவே வீசினார். இப்படி தான் டெஸ்ட் கிரிக்கெட் என்னை வரவேற்றது. அடுத்து சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வக்கார் யூனிஸ் பந்து வீச வந்த போது நான் ஒரு ரன் எடுத்து இருந்தேன்.வக்கார் யூனிஸ் பந்தை ‘ஷாட் பிட்ச்’சாக வீசினார். நான் அந்த பந்து எகிறும் உயரத்தை தவறாக கணித்து விட்டேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டில் தாக்கியதுடன் எனது மூக்கையும் பதம் பார்த்தது. உடனடியாக எனது கண் பார்வை மங்க தொடங்கியது.தலை பாரமானது போல் உணர்ந்தேன். அப்போதும் பந்து எந்த திசையில் செல்கிறது என்று தான் நான் பார்த்தேன். அதன் பிறகு தான் மூக்கில் இருந்து வெளியான ரத்தம் பனியனில் வடிந்து இருப்பதை உணர்ந்தேன். அடிபட்டதில் இருந்து மெல்ல மீள நினைத்த போது, அருகில் நின்று கொண்டிருந்த ஜாவீத் மியாண்டட், ‘நீ ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது’ என்று கிண்டலடித்தார்.
மேலும் என்னை பார்த்து ரசிகர்கள் வைத்து இருந்த பேனர் மேலும் சங்கடப்படுத்தியது. ‘ஏய் குழந்தை நீ வீட்டுக்கு போய் பால் குடி’ என்று அந்த பேனரில் எழுதப்பட்டு இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் நாளில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் எனது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.உணவு இடைவேளைக்கு பிறகு மைதானத்துக்குள் புகுந்த 16 வயது இளைஞர் ஒருவர் கபில்தேவை நோக்கி சென்று பாகிஸ்தானில் இருக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் வசைபாடினார். அதே நபர் மனோஜ்பிரபாகரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அடுத்து கேப்டன் ஸ்ரீகாந்திடம் சென்று அந்த நபர் கைகலப்பு செய்தார்.அப்போது நான் பாயிண்ட் திசையில் பீல்டிங் செய்து கொண்டு இருந்தேன். அடுத்து நம்மை நோக்கி தான் வருவார் என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது. அவர் என்னை நோக்கி வந்தால் ஓய்வு அறைக்கு ஓடிவிட வேண்டும் என்ற நினைத்தபடி நகர்ந்தேன். இரு அணிகளுக்கு இடையிலும் கிரிக்கெட் ஆட்டத்தை தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பதே உண்மை.
நான் எடை அதிகம் கொண்ட பேட்டுகளை பயன்படுத்தினேன். சில சமயங்களில் எடை குறைவான பேட்களை பயன்படுத்த முயற்சித்தேன். ஆனால் எடை குறைவான பேட்டில் ஆடும் போது, நான் சவுகரியமாக உணரவில்லை.பேட்டின் ஓட்டுமொத்த சுழற்சியும் எடையை பொறுத்தே அமையும். ‘டிரைவ் ஷாட்’ ஆடுகையில் பேட்டின் எடையை பொறுத்தே ஆற்றல் அமையும். பேட்டிங் செய்யும் போது பேட் வசதியாக இருப்பதை உணர வேண்டியது அவசியம், அது எனக்கு எடை குறைவான பேட்டுடன் ஆடுகையில் கிடைக்கவில்லை.இதேபோல் நான் பேட்டை பிடிக்கும் முறை குறித்தும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பேட்டின் கைப்பிடியில் அடிப்பகுதியை பிடித்து நான் ஆடுவேன். நான் எனது அண்ணன் அஜித்துடன் இணைந்து விளையாடும் போது, அவர் என்னை விட 10 வயது மூத்தவர். எனக்கு என்று தனி பேட் கிடையாது. நான் அவருடைய பேட்டை வைத்து தான் ஆடுவேன்.அவரது பெரிய பேட்டை கைப்பிடியின் அடிப்பகுதியில் பிடித்தால் தான் என்னால் பேட்டை எளிதாக தூக்கி விளையாட முடியும். எனவே பேட்டின் கைப்பிடியில் கீழ்ப்பகுதியை பிடித்து ஆடுவது எனது சிறு வயது பழக்கம். சில பயிற்சியாளர்கள் நான் பேட்டை பிடிக்கும் முறையை மாற்ற சொன்னார்கள்.ஆனால் அந்த மாற்றம் எனக்கு ஒத்துவரவில்லை. எதிர்முனையில் எனது கவனம் சிறப்பாக இருக்கையில் நான் நன்றாக பேட் செய்து இருக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி