செய்திகள்,திரையுலகம் பூஜை (2014) திரை விமர்சனம்…

பூஜை (2014) திரை விமர்சனம்…

பூஜை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
அவிநாசி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் விஷால். இவருக்கு துணையாக பிளாக் பாண்டி, சூரி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் ஷாப்பிங் மாலில் நாயகி சுருதிஹாசனை விஷால் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சுருதிஹாசன் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த விஷால், சுருதியிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு அவர் மீது விஷாலுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுருதி மீது விஷாலுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை சுருதியிடம் நேரடியாக சொல்கிறார். ஆனால் சுருதியோ அவருடைய காதலை நிராகரித்து, அவமானப்படுத்தி விடுகிறார்.

இதற்கிடையில் கோவையில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களான ராதிகா, தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை பொள்ளாச்சி சேத்துமடை பெருமாள் கோவில் அறங்காவலராக இருக்கும் அன்னதாண்டவம் அபகரிக்க முயற்சி செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் இவர், மறைமுகமாக பல கொலைகளை செய்து வருகிறார். இவரது அபகரிப்பு திட்டத்தை தெரிந்து கொண்ட கோவை குருப்ஸ் பங்குதாரர்கள், அந்த நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்கிறார்கள்.இந்நிலையில் சுருதியின் தோழி வீட்டுக்கு தெரியாமல் காதலுடன் ஊரை விட்டு ஓடுகிறாள். இதை அறியும் சுருதி விஷாலின் உதவியுடன் அவளது தோழியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார். தான் அவமானப்படுத்தினாலும் தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்த விஷாலின் மீது சுருதிக்கு காதல் வருகிறது. தன் காதலை விஷாலிடம் சொல்ல செல்கிறார்.
அப்போது நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க ரிஜிஸ்டர் அலுவலத்திற்கு சென்றிருக்கும் ராதிகாவுடன் விஷாலை பார்த்ததும் சுருதி, விஷால் யார் என்று சூரியிடம் கேட்கிறார். அதற்கு சூரி கோவை குரூப்ஸ் பங்குதாரர்களின் ஒருவரான ராதிகாவின் மகன் தான் விஷால் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஷாலை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துவதுடன், தன் காதலை சொல்லமலேயே சென்று விடுகிறார். இருந்தாலும் அவளது தோழி மூலமாக சுருதி காதலிப்பதை விஷால் தெரிந்துக் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.

ஒரு நாள் போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜை, அன்னதாண்டவத்தின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களை விஷால் அடித்து சத்யராஜையும் அவரது மனைவியையும் காப்பாற்றுகிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாததால் கோபம் அடையும் அன்னதாண்டவம் யார் என்று தெரியாத விஷாலை தேடி கண்டுபிடித்து தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார். இந்நிலையில் அன்னதாண்டவத்திற்கு அறங்காவலர் பதவியும் பறிபோகிறது. அந்தப் பதவிக்கு ஜெயப்பிரகாஷ் வருகிறார். ஊர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜெயப்பிரகாசை ஊர் மக்கள் முன்னிலையில் வேறொருவர் மூலம் அவரை அடிக்கவைத்து அவமானப்படுத்துகிறார் அன்னதாண்டவம்.ஜெயப்பிரகாசுக்கு நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்டதாக எண்ணிய ராதிகா, தனது மகனான விஷாலை அழைத்து, அன்னதாண்டவத்தை அடிக்கும்படி ஆணையிடுகிறார். விஷாலும் தன் அம்மாவின் ஆணைக்கிணங்க அன்னதாண்டவத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் சித்தப்பா ஜெயப்பிரகாசை அவமானப்படுத்தியது போல் பொதுமக்கள் முன்னால் அன்னதாண்டவத்தையும் அவமானப்படுத்துவேன் என்று விஷால் சவால் விட்டு செல்கிறார்.

சொன்னது போல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்து பலரும் பார்க்கும் வகையில் அன்னதாண்டவத்தை அடித்து அவமானப்படுத்துகிறார். இதை சுருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்புகிறார். தோழியோ அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்து விடுகிறார். இது உலகம் முழுவதும் பரவி அன்னதாண்டவத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுகிறது. இந்தளவிற்கு அவமானப்படுத்திய விஷாலையும் அவனது குடும்பத்தையும் பழி வாங்க அன்னதாண்டவம் முடிவு செய்கிறார்.இறுதியில் அன்னதாண்டவம் விஷால் குடும்பத்தை பழிவாங்கினாரா? இல்லை அன்னதாண்டவத்திடம் இருந்து தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நாயகியான சுருதியை கோவை பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹரி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு உண்டான கிராமத்து பெண் வேடம் சுருதிக்கு பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் நல்ல நடிப்பு, பாடல் காட்சிகளில் சிறப்பான ஆட்டம் என ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் ஆட தான் முடியவில்லை.ஹரி தனது படத்திற்குண்டான காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தையும் இப்படத்திலும் சரியாக கலந்து சுவையாக படைத்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரள வைக்கிறது. அதை காட்சியமைத்த விதமும் பின்னணி இசையும் சேர்ந்து விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பூஜை’ வேட்டை……………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி