45-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கோல் பகுதியில் பந்தை காலால் தடுத்ததற்காக இந்தியாவுக்கு முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை இந்திய வீரர் ஹர்மன் பிரீத்சிங் லாவகமாக கோலாக மாற்றி அசத்தினார். 53-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இன்னொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. ஆனால் அதை வருண்குமார் வீணடித்து விட்டார். இதைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் திருப்பியது. தங்களுக்கு கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் இங்கிலாந்து வீரர் சாமுவேல் பிரெஞ்ச் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் மறுபடியும் இங்கிலாந்துக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் அபினவ் பாண்டேவ் முறியடித்தார்.இங்கிலாந்தின் இன்னொரு வலுவான ஷாட்டை தடுத்த போது கோல் கீப்பர் அபினவ் பாண்டேவின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியேற்றப்பட, கடைசி கட்டத்தில் அவருக்கு பதிலாக சுபோத் திர்கே கோல் கீப்பராக பணியாற்றினார்.
வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்ற பரபரப்பான சூழலில் வெறும் 45 வினாடி மட்டுமே எஞ்சியிருந்த போது, இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் சந்தர்ப்பம் கனிந்தது. இந்த பொன்னான வாய்ப்பில் ஹர்மன்பிரீத்சிங் கோல் அடிக்க இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இதன் மூலம் லீக்கில் இங்கிலாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. லீக்கில் 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இங்கிலாந்து சந்தித்த ஒரே தோல்வி இது தான்.2011-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் 2 முறை கோப்பையை வென்ற ஒரே அணி இந்தியா தான். 2011-ம் ஆண்டில் மலேசியாவும், 2012-ம் ஆண்டில் ஜெர்மனியும் கோப்பையை வென்றிருந்தது. 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வசப்படுத்தியிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 9 கோல்கள் அடித்த இந்திய வீரர் ஹர்மன்பிரீத்சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி