ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவு பற்றிய பேச்சுக்களை நடத்தினார்.அப்போது இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடைந்ததற்கு பிரதமர் மோடியை அவர்கள் பாராட்டினார்கள். ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் மோடி எழுப்பிய கோரிக்கைக்கு, அவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். 3 தலைவர்களும் தங்கள் நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் ‘சார்க்’ அமைப்பை பிராந்திய ரீதியில் வலுவான ஒரு அமைப்பாக உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பதாக மோடி தெரிவித்தார்.
மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ராஜபக்சே நிருபர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமுகமானதாகவும், நல்ல விதமாகவும் அமைந்தது. நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்” என குறிப்பிட்டார்.நேபாள பிரதமர் கொய்ராலாவிடம் மோடி பேசும்போது, நேபாள பயணம் மேற்கொள்ள ஆவலுடன் உள்ளேன். சீதை பிறந்த ஜனக்பூருக்கும், புத்தர் பிறந்த லும்பினிக்கும் வர விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசும்போது, எங்கள் நாட்டை தீவிரவாதிகள் எந்த வடிவத்திலும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம், இந்தியாவும் இதேபோல் செயல்படும் என நம்புகிறேன் என கூறினார்.டீஸ்டா நதி நீர் பிரச்சினையில் கருத்தொற்றுமை காண்பதற்கு பாடுபடப் போவதாக ஷேக் ஹசீனாவிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.ஐ.நா. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நியூயார்க்கில் மத்திய பூங்காவில் நடந்த உலக குடிமக்கள் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
திறந்தவெளியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த விழாவில் மோடியை பேசுவதற்காக அழைத்து அறிமுகம் செய்த நடிகர் யூ ஜேக்மேன், டீ விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஆனார். இப்போது அமோக மெஜாரிட்டியுடன் இந்தியாவின் பிரதமர் ஆகி உள்ளார். அவர் தான் பிரதமர் மோடி என கூறினார்.இந்த விழாவில் மோடி முதல் 7 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்து உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளை கூறினார். பின்னர் கூடி இருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க ‘நமஸ்தே’ என கூறினார்.இளைஞர்கள் நிரம்பி வழிந்த இந்த விழாவில் பிரதமர் மோடி, வறுமையை ஒழித்து, அனைவருக்கும் கல்வியையும், அடிப்படை சுகாதார வசதிகளை அளிக்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், எனது ஆதரவை தெரிவிப்பதற்கும், உலகளாவிய இந்த முயற்சிக்கு இந்திய இளைஞர்கள் உங்களோடு கரம் கோர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை கூறிக்கொள்வதற்கும்தான் இந்த விழாவில் பங்கேற்க வந்தேன் என குறிப்பிட்டார்.
இதையடுத்து மோடி தான் தங்கி இருந்த ஓட்டலில், சிம்போனி டெக்னாலஜி குழும தலைவர் ரொமேஷ் வத்வானி, காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ டி சவுசா, அடோப் சிஸ்டம் தலைவர் சாந்தனு நாராயென் உள்ளிட்ட 10 முன்னணி இந்திய அமெரிக்க தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.அவர்களிடம் தனது ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பற்றி எடுத்துக்கூறி, இந்தியாவை உலகளாவிய தயாரிப்பு மையமாக உருவாக்குவதே தனது இலக்கு என விளக்கினார்.இந்தியாவில் மனித வள மேம்பாட்டில், ஆராய்ச்சிகளில் அவர்களது பங்களிப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தார். விடுமுறையின்போது, அவர்கள் இந்தியாவுக்கு வந்து கற்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இன்று பிரதமர் மோடி, நியூயார்க்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன்- லாரி கிளிண்டன் தம்பதியை சந்தித்து பேசுகிறார். பிற்பகலில் நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் செல்கிறார்.
வெள்ளை மாளிகையில் அவரை ஜனாதிபதி ஒபாமா வரவேற்று, சாதாரண முறையில் பேசுவதுடன், கவுரவித்து இரவு விருந்து வழங்குகிறார். பிரதமர் மோடியும், ஒபாமாவும் சந்திப்பது இதுவே முதல் முறை.
நாளை 30-ந் தேதி மோடியும், ஒபாமாவும் இரு தரப்பு முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி