விழாவில் அர்ஜூன் பேசும்போது, நான் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன், எனது அப்பா சம்மதம் சொல்லிவிட்டார், ஆனால் என் அம்மா சம்மதிக்கவில்லை, இதனால் நான் ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது. ராணுவத்திற்கு போய் இருந்தால் கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன். அதனால் நான் சினிமாவில் நடிக்கும்போது, அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும்போது என்னையும் அறியாமல் அதிக ஈடுபாட்டுடன் நடித்து விடுகிறேன். சினிமாவில் நாட்டுப்பற்று உடைய படங்களில் நடிக்கும்போது, ஒரு ஹீரோவாக இல்லாமல் உண்மையான நாட்டுப்பற்று உடைய நபராக நடிக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் நாட்டுப்பற்று அவசியம் இருக்க வேண்டும். இதுவரை நான் 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். என்னுள் எப்போதும் நாட்டுப்பற்று இருந்து கொண்டே இருக்கிறது.
ஜெய்ஹிந்த் படத்திற்கும் ஜெய்ஹிந்த்-2 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய கல்விமுறை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறோம். குறிப்பாக ஏழையோ, பணக்காரனோ அனைவருக்கும் ஒரே கல்விமுறை எனும் கருத்தை படத்தில் சொல்லியிருக்கிறோம். ஜெய்ஹிந்த்-2 படத்தின் ஆடியோ விழாவிற்கு உண்மையான ரியல் ஹீரோவை அழைக்க எண்ணினோம். அதன்படி மேஜர் முகுந்த் குடும்பத்தாரிடம், இதுதொடர்பாக பேசி அவர்களை இங்கு வரவழைத்துள்ளோம். இந்த விழாவில் அவர்கள் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி. எல்லையில் நாட்டை காப்பாற்றுபவர்கள் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் மக்களை காப்பாற்றுபவர்களும் ரியல் ஹீரோக்கள் தான் என்றார்.
இயக்குனர் பாலா பேசும்போது, இந்தப்படத்தின் விழாவுக்கு அர்ஜூன் சார் என்னை அழைத்தபோது, விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தார் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னார், இதனையடுத்து நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் வர சம்மதம் சொன்னேன். இதுவரை நான் எந்த ஒரு நடிகர், நடிகையருடனோ அல்லது வேறு சினிமாக்காரர்கள் உடனோ போட்டோ எடுக்க ஆசைப்பட்டதில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி போட்டோ எடுத்து கொண்டார். மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் பேசும்போது, ஜென்டில்மேன் படத்தை பார்த்து அர்ஜூனின் தீவிர ரசிகரான முகுந்த், பின்னர் தானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று எண்ணினான். அவன் இப்போது இல்லாதது எங்களுக்கு வருத்தம் தான். இந்த விழாவில் நாங்கள் கலந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி