புவனேஷ்வர்குமார் வீசிய மிரட்டலான ‘இன்ஸ்விங்’கரில் ஹாலஸ் (6 ரன்) கிளீன் போல்டு ஆனார். அதே ஓவரில் அலஸ்டர் குக் (9 ரன்), ‘கல்லி’ திசையில் ரெய்னாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேரி பேலன்ஸ் (7 ரன்), முகமது ஷமியின் வேகத்தில் அடங்கினார். இதனால் நிலைகுலைந்து போன இங்கிலாந்து அணி 23 ரன்னுக்குள் (8 ஓவர்) 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து அல்லோல் பட்டது.
இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், இயான் மோர்கனும் இணைந்து அணியை மீட்க நிதானம் காட்டினர். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சில் இவர்களால் துரிதமாக ரன் எடுக்க இயலவில்லை. இதனால் 27.2 ஓவர்களில் தான் இங்கிலாந்து 100 ரன்களை தொட்டது. 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த இவர்களை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா பிரித்தார். மோர்கன் 32 ரன்னிலும் (58 பந்து, 3 பவுண்டரி), ஜோ ரூட் 44 ரன்னிலும் (81 பந்து, 2 பவுண்டரி) அடுத்தடுத்து வெளியேறினர்.
இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு இறங்கிய மொயீன் அலி ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும், அவருக்கு எதிர்முனை வீரர்களிடம் இருந்து எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. அஸ்வின் ஓவர்களில் 2 சிக்சரும், ரெய்னாவின் பந்து வீச்சில் ஒரு சிக்சரும் விரட்டி உள்ளூர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த மொயீன் அலி, அணி 200 ரன்களை கடக்க வைத்த திருப்தியுடன் 67 ரன்களில் (50 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். முடிவில் இங்கிலாந்து 49.3 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 மெய்டனுடன் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.அடுத்து 207 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், ஷிகர் தவானும் களம் புகுந்தனர். சில ஓவர்கள் (முதல் 4 ஓவரில் 4 ரன்) பொறுமையை கடைபிடித்த இவர்கள் அதன் பிறகு அதிரடியில் இறங்கினர். ஆண்டர்சனின் ஒரே ஓவரில் ரஹானே 4 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு அடிகோலினார்.
இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளிய இவர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் கடக்க வைத்தனர். சொந்த மண்ணில் ஆடிய போதிலும் நமது பேட்ஸ்மேன்களுக்கு, இங்கிலாந்து பவுலர்களால் குடைச்சல் கொடுக்க முடியவில்லை.
ரன்வேட்டையாடுவதில் தவானை விட வேகம் காட்டிய ரஹானே அவ்வப்போது சிக்சரும் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக ஆடிய ரஹானே ஒரு நாள் போட்டியில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். தொடக்க விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்த நிலையில், ரஹானே 106 ரன்களில் (100 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். இங்கிலாந்து மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக இந்திய ஜோடி ஓர் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன் (183 ரன்) இது தான்.அடுத்து விராட் கோலி ஆட வந்தார். அதே சமயம் தனது ரன்வேகத்தை தீவிரப்படுத்திய ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஹாரி குர்னேவின் ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
இந்திய அணி 30.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. 117 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் பெரிய வெற்றியாகவும் இது அமைந்தது. தவான் 97 ரன்களுடன் (81 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, டெஸ்டில் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி