நான், 75 படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறேன். 125 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். கடந்த 1994-ம் வருடம் வெளிவந்த ’அமைதிப்படை’ படத்தில், கடைசியாக வில்லனாக நடித்தேன். சில வருடங்களுக்கு முன்பு ’சிவாஜி’ படத்தில் வில்லனாக நடிக்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு சம்பளமாக மிகப்பெரிய தொகையை தருவதாக சொன்னார்கள். நான் நடிக்க மறுத்து விட்டேன்.
இதேபோல் ’எந்திரன்’ படத்திலும் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் ’மாஸ்’ படத்திலும் வில்லனாக நடிக்க என்னை அழைத்தார்கள். மறுத்து விட்டேன். சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா டைரக்டு செய்யும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.
20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ’இசை’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ’சிவாஜி’ படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால் கூட, ’இசை’ படத்தில் நடித்து இருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். எஸ்.ஜே.சூர்யா, மிக திறமையான டைரக்டர். ’வாலி’ படத்துக்கு முன்பு அஜீத் காதல் நாயகனாகத்தான் இருந்தார். அவருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த படம், ’வாலி.’ அந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா வாய் பேச முடியாத கதாபாத்திரத்தை வில்லனாக நடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதேபோல், ’இசை’ படமும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.’’ இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி