இன்று நான் இங்கு இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில் பேசவில்லை. நாட்டின் முதல் பணியாளர் என்ற அடிப்படையில் உங்களிடம் பேசுகிறேன். நாம் சுதந்திரம் பெற நமது முந்தைய பல தலைமுறையினர் உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்துள்ளனர். ஏராளமானவர்கள் தங்கள் இளமையையும், வாழ்வையும் சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணிப்பு செய்தனர். அந்த தியாகிகளுக்கு முதலில் நான் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று நமக்கு தேசிய விழா. இந்த தேசிய விழாவை நாம் ஒவ்வொருவரும் நாட்டுப் பற்றை பேணி, பாதுகாத்து, போற்றுவதற்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது நாட்டுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதலைப் பெற வேண்டும். நமது முந்தைய அரசுகள், முன்னாள் பிரதமர்கள் எல்லோரும் நமது தேசத்தை மேம்படுத்தி உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களது சேவைகளையும், வழிகாட்டுதல்களையும் போற்றி, நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த நேரத்தில் நமது பெரும்பான்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் உள்பட மக்கள் ஒவ்வொருவரையும் சேர்த்து கொண்டு முன்னேற நாங்கள் விரும்புகிறோம். நமது நாடு அரசியல்வாதிகளாலோ அல்லது ஆட்சியாளர்களாலோ அல்லது அரசுகளாலோ கட்டமைக்கப் படவில்லை. நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயி மற்றும் உழைக்கும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.ஒரு சிறிய கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் இன்று இந்த தேசியக் கொடிக்கு கீழ் நின்று பேசுவது நமது சட்ட அமைப்பின் சிறப்பைக் காட்டுகிறது. நமது நாட்டை மேம்படுத்த நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டும். ஒன்று போல் நடக்க வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து நாட்டை முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய தினம் நமக்கு புது உந்துசக்தியை தருகிறது.நான் டெல்லிக்கு வெளியில் வளர்ந்தவன். நான் டெல்லிக்கு வந்தபோது ஒரு அரசுக்குள் டஜன் கணக்கில் பல அரசுகள் இருப்பதை, இயங்குவதை உணர்ந்தேன். அரசின் ஒரு துறை, மற்றொரு துறைக்கு எதிராக சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சில சண்டைகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட சென்று விட்டன. இப்படி அரசு துறைகளே ஒன்றோடு ஒன்று முட்டி மோதி சண்டை போட்டுக் கொண்டிருந்தால், நாம் எப்படி இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்ல முடியும்?
எனவே நமது அரசை வெறும் சட்ட உருவம் தரும் அமைப்பாக இல்லாமல், ஒன்றுபட்டு செயல்படும் ஒரு அமைப்பாக செயல்படுத்தவே நான் விரும்புகிறேன். இதற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். அரசு துறைகள் ஒவ்வொன்றும் முழு திறனுடன் செயல்படுவதை ஊக்கப்படுத்துவதன் மூலம் நமது நாட்டை மேம்படுத்த விரும்புகிறேன். ஆனால் நமது அரசு ஊழியர்களில் பலர் அத்தகைய உணர்வுடன் இல்லை.அரசு ஊழியர்கள் கால தாமதமாக பணிக்கு வருவது வருத்தம் அளிக்கிறது. அத்தகைய செய்திகளைப் படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படவில்லை. அது செய்தியாகலாமா? நாட்டு நலனுக்காக நாம் கொஞ்சமாவது ஏதாவது செய்ய வேண்டும். நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல், இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்று சுயநலத்துடன் செயல்படுவதை நாம் ஒவ்வொருவரும் கைவிட வேண்டும். கற்பழிப்பு சம்பவங்கள் அவமானகரமானவை. அவை நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்துகின்றன. கற்பழிப்பு பற்றிய செய்திகளை கேள்விப்படும் போது வெட்கத்தால் நாம் தலைகுனிய வேண்டும். பெற்றோர் தங்கள் மகள்களை கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் மகன்களை கட்டுப் படுத்த யாருக்கும் துணிவு வராதது ஏன்.
வன்முறை மூலம் நாம் எதுவும் பெற இயலாது. வன்முறை பாதையை தீவிரவாதிகளும், மாவோஸ்டுகளும் கைவிட வேண்டும். நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும். மத கலவரம், இனக்கல வரத்தால் நாடெங்கும் பாதிப்பு ஏற்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு இத்தகைய கலவரம் இல்லாமல் இருந்தால், மக்கள் நல்ல நிலை உருவாவதை கண் எதிரில் பார்க்க முடியும். உங்கள் தோள்களில் துப்பாக்கியை ஏந்துவதற்கு பதில் கலப்பையை ஏந்திப் பாருங்கள், இந்த நாடு ரத்த சிவப்பு வண்ணத்தில் இருந்து வளர்ச்சிக்கான பச்சை வண்ணத்துக்கு மாறி விடும். அது மட்டுமல்ல நாட்டில் பால் இனத்திலும் ஏற்றுத் தாழ்வு ஏற்பட்டுள்ளது.இதை கடவுள் ஏற்படுத்தவில்லை. நாம்தான் உருவாக்கி விட்டோம். பெண் குழந்தைகளை கருவிலே அழிப்பதால்தான் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை கொல்லாதீர்கள். பெற்றோர்களையும், டாக்டர்களையும் இந்த விஷயத்தில் கவனமாகவும், பொறுப்புடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் பழக்கம் 21–ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது. இந்த தேசத்தின் மகள்கள் ஒவ்வொருவரும், இந்த நாடு முன்னேற கணிசமான பங்களிப்பைத் தருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
எனவே பெண்களை போற்றுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுங்கள். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதை நிறுத்துங்கள். பெண் சக்தி உயர்ந்தது. 5 மகன்கள் கொண்ட குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு மகள்தான், பெற்றோரை பாதுகாப்பதை நான் வாழ்வில் பார்த்து இருக்கிறேன். எனவே பெண் குழந்தைகளை புறக்கணிக்காதீர்கள். நல்லாட்சி, வளர்ச்சி இரண்டும்தான் நமது நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். நமது அரசு பணியாளர்கள் ஒவ்வொருவரும் நாம் நமது நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்பதை உணர வேண்டும்.சாதாரண கடை நிலை ஊழியரில் இருந்து அரசுத்துறை செயலாளர் வரை ஒவ்வொரு வரும் பொருத்தமான தகுதி வாய்ந்த சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நமது நாட்டில் இன்னமும் ஏழை மக்கள் சேமிப்பு இல்லாமல் கீழ்மட்ட நிலையிலே உள்ளனர். அவர்கள் வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள எல்லா ஏழை மக்களுக்கும் ‘‘ஜன்தான்’’ திட்டம் என்ற பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்க உதவிகள் செய்யப்படும்.இந்த ஜன்தான் திட்டத்தின் கீழ் ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு செய்யப்படும். ஆட்சியில் மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதன் மூலம் ஒவ்வொருவரையும் நாட்டுப் பணியில் ஒருங்கிணைக்க முடியும். நமது நாட்டில் நிறைய இளைஞர்கள் கொண்ட பலம் உள்ளது. இந்த இளைஞர் பலத்தை பயன்படுத்திக் கொள்ள நாம் எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா? இப்போதைக்கு இந்தியாவுக்கு திறமையான பணியாளர் படை தேவைப்படுகிறது. இந்த நல்ல நேரத்தில் நமது நாட்டு இளைஞர்களை நான் அழைக்கிறேன். ‘‘வாருங்கள் இந்தியாவை உருவாக்குவோம்’’.
ஒவ்வொரு இளைஞனும் நாட்டுக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும். இளைஞர்களே…. உங்கள் பலத்தையும், வாய்ப்பையும் வீணாக்கி விடாதீர்கள். சொந்த தொழில் தொடங்குங்கள். இதன் மூலம் எந்த பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு பொருளிலும் ‘‘மேட் இன் இந்தியா’’ என்ற முத்திரை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந்தியா வந்து தொழில் தொடங்கலாம். அதற்கான வளம் இங்கு உள்ளது.
இந்தியாவில் தயாராகும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். உலகத்துடன் போட்டி போடும் வகையில் நமது இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது வேலை வாய்ப்பை உருவாக்கும். அதுதான் முன்னேற்றத்தைத் தரும். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எழுப்பிய, ‘‘ஜெய்சவான், ஜெய் கிஷான்’’ என்ற வாசகத்தின் உண்மையான பொருளை நாம் மறந்து விடக்கூடாது. முன்னேற்றத்துக்கான பெயரை இந்திய இளைஞர்கள் கொடுத்துள்ளனர். நாம் ஒன்று பட்டு செயல்பட வேண்டும். பொருட்களை இறக்குமதி செய்வதை விட உலகுக்கு எல்லா பொருட்களையும் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிராண்ட்பேண்ட் இணைப்பு கொடுத்து இந்தியாவை டிஜிட்டல் இந்தியா நாடாக மாற்ற வேண்டும். இந்த நேரத்தில் ஒவ்வொரு இந்தியனும் சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2–ந்தேதி சுத்தமான இந்தியாவுக்கான பிரசாரம் நாடெங்கும் தொடங்கப்படும். இந்த திட்டத்தை அன்று நான் தொடங்கி வைப்பேன். நாடெங்கும் கிராமங்கள் மேம்பட வேண்டும். கழிவறைகள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எம்.பி.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை இதற்கு பயன்படுத்த வேண்டும்.நாட்டின் வளர்ச்சிக்காக திட்டக் கமிஷன் புதிய கழகமாக மாற்றப்படும். வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்படும். இந்திய சுதந்திரத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் என் சுதந்திர தின வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி