செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…!

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…!

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…! post thumbnail image
10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை இந்த உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் சிறந்த நூலைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட அறிஞர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.

புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதாலும், மொழிவளம், வெளிப்பாட்டு உத்தி, உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல், இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் போன்ற சிறப்புகளாலும் “மூன்றாம் உலகப்போர்” சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் குழு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று கோலாலம்பூரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்தார். அறக்கட்டளை நிறுவனர் டான் ஸ்ரீ சோமசுந்தரம் உடனிருந்தார்.

தன்னுடைய நாவலுக்கு கிடைத்திருக்கும் பரிசு குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:

”டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நிகழ்த்திய புத்தகப்பரிசுப் போட்டியில் நான் எழுதிய “மூன்றாம் உலகப் போர்” நாவல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்குப் பெருமகிழ்வு தந்தது; பெருமிதத்தையும் கொடுத்தது. தமிழ் இலக்கியத்திற்கு உலகளவில் வழங்கப்படும் ஞானபீடம் என்று இதனைக் கருதுகிறேன்.

இந்தப் படைப்பு காலத்தின் வெற்றிடத்தை நிரப்பும் கருத்தோடு எழுதப்பட்டது. புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக வேளாண்மையின் நசிவுதான் இதன் உள்ளடக்கமாகத் திகழ்கிறது. அடுத்த நூற்றாண்டில் பூமிப்பந்துக்கு நேரும் பேராபத்தைக் கருத்தில்கொண்டு உலக மானுடச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது தான் என் உயிர்த்தீயின் வெப்பமாக இருந்தது. அதனைப் புரிந்துகொண்டதற்கும் என் வலியை உணர்ந்து கொண்டதற்கும், உலக மானுடம் குறித்துக் கவலை கொண்டதற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த சர்வதேசப் பெருமையை தமிழுக்காக எழுதுகோல் ஏந்திய என் முன்னோடிகளின் காலடிகளில் காணிக்கை செய்கிறேன்.” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பரிசு வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசைப் பெற்றுக்கொள்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி