இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது டைரக்டர் சரண் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.
அப்போது டைரக்டர் சரண் பேசும்போது, அசல் படத்திற்கு பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருக்கிறேன். அந்தவகையில் சினிமாவுக்கும், எனக்குமிடையே விழுந்த இடைவெளியை பாலம் போட்டு தாண்டி வந்திருக்கிறேன். மேலும். கே.பாலசந்தரின் பாசறையில் இருந்து வந்தவன் நான் என்பதில் எனக்கு பெருமை உண்டு. அதனால்தான், எனது முதல் படமான காதல் மன்னனில் நடிக்க அஜீத்திடம் கதை சொல்ல சந்தித்தபோது, இரண்டு லைனில் மட்டுமே கதையை சொல்லுங்கள் என்றார். காரணம் கேட்டபோது, உங்களுக்கு இது முதல் படம். அதனால் உயிரை கொடுத்து கதை பண்ணியிருப்பீர்கள். அதோடு கே.பாலசந்தரிடமிருந்து வந்திருக்கிறீர்கள். அதனால் உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று மேற்கொண்டு அவர் கதையே கேட்கவில்லை. படப்பிடிப்பு எப்போது என்று சொல்லுங்கள் வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். அதையடுத்து எனது அமர்க்களம் படத்திலும் தொடர்ந்து நடித்தார் அஜீத்.
பின்னர், பிரசாந்த், விக்ரம், கமல் என் முன்னணி ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து படம் இயக்கினேன். இருப்பினும் அசல் படத்திற்கு பிறகு ஒரு எதிர்பாராத இடைவெளி விழுந்து விட்டது. ஆனால் இனிமேல் இடைவெளியே வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த படத்தை பவர்புல்லான ஒரு கதையில் இயக்கி வருகிறேன. எனது மோதி விளையாடு படத்தில் நடித்த வினய் டபுள் ரோலில் இப்படத்தில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த நடிகைகளை மும்பை சென்று கிட்டத்தட்ட 200 நடிகைகளை பார்த்து கடைசியாகத்தான் கண்டு பிடித்தேன். அந்த வகையில், சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, சேஷா கம்பட்டி ஆகிய மூன்று இளவட்ட நடிகைகளை இறக்குமதி செய்திருக்கிறேன். இவர்களை எனது முதல் பட நாயகியான மானு அறிமுகம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரை அழைத்தேன். அவரும் அதற்காகவே வந்திருக்கிறார்.
இந்த மூன்று நடிகைகளில் சாமுத்திரிகா திருநெல்வேலி தமிழச்சியாக நடிக்கிறார். அந்த ஏரியா பெண்களைப்போன்ற முகவெட்டு வேண்டும் என்பதற்காக இவருக்காக ரொம்பவே மெனக்கெட்டேன். ஆனால் அச்சு அசலாக அப்படியே ஒரு நடிகை கிடைத்தபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது என்றார்.
அவரையடுத்து அப்படத்தில் காமெடியனாக நடித்துள்ள டேனியல் பேசுகையில், டைரக்டர் கதாநாயகிகளிடம்தான் சிரித்து சிரித்து வேலை வாங்கினார் என்று சொல்லிவிட்டு ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டு அமர்ந்தார்.அதைக்கேட்டு ஷாக்கான டைரக்டர் சரண் உடனே மைக்கைப்பிடித்து, நான் எல்லோரிடமும் ஒரேமாதிரியாகத்தான் வேலை வாங்கினேன். ஆனால், அந்த நடிகைகளுக்கு மொழிப்பிரச்சினை இருந்ததால் அவர்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். அதைப்பார்த்துதான் அவர் அப்படி சொன்னதாக கருதுகிறேன் என்று சொல்லிவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தார் சரண்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி