செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வசனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டனம்!…

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வசனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டனம்!…

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வசனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டனம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி உள்ள ‘வேலையில்லா பட்டதாரி‘ படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷின் பெற்றோர், அவரை திட்டுவது போன்ற காட்சி உள்ளது.அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப் பேசும் நடிகர் தனுஷ், தம்பியைப் போல நீ என்னை புனித ஜான்ஸ் பள்ளிக்கூடத்திலா சேர்த்தீர்கள். ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில்தானே படிக்க வைத்தீர்கள்.என்னால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடியவில்லை. வேலையும் கிடைக்கவில்லை என்பது போன்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்திற்கு தமிழகத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வசனக் காட்சியை நீக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுதொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் கூறியது:நாடு முழுவதும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பெரிய சேவையில் ராமகிருஷ்ண மிஷன் ஈடுபட்டுள்ளது.சீனா எல்லையை ஒட்டியுள்ள மலைப் பிரதேசமான அருணாசல பிரதேசத்தில் கூட ஏழை மாணவர்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் சுமார் 150 கல்வி நிறுவனங்களை ராமகிருஷ்ண மிஷன் வியாபார நோக்கில்லாமல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஏழை, நடுத்தர மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இக் கல்வி நிறுவனங்களில் படித்த பலர் நீதிபதிகளாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.இதுபோன்று கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் பெரிய கல்வி நிறுவனத்தைப் பற்றி நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில், ராமகிருஷ்ண மிஷன் கல்வி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது.திரைப்படங்களில் வரும் இதுபோன்ற வசனக் காட்சிகளால் பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நாட்டின் பாரம்பரியமிக்க ஒரு பெரிய கல்வி நிறுவனத்தைப் பற்றி விமர்சிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள அக் காட்சியை படக் குழுவினர் நீக்க வேண்டும். மேலும், படக் குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.இது தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கூறியது:எந்த அடிப்படை ஆதாரமுமின்றி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, இந்திய இளைஞர்களின் எழுச்சிக்குக் காரணமான சுவாமி விவேகானந்தரின் அறவழியில் பல தலைவர்களையும், நல்லுணர்வு கொண்ட மனிதர்களையும் உலகம் முழுவதும் உருவாக்கி வரும் ராமகிருஷ்ண மிஷனை விமர்சித்து படமெடுத்த இயக்குநர், தயாரித்து நடித்த தனுஷுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.நடிகர் தனுஷ், படத்தின் இயக்குநர் ஆகியோர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இல்லாவிட்டால் தனுஷுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி