செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் எடுத்த முடிவு தடைப்பட்டதால் அங்கு தொடங்கிய பிரிவினைப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.அந்நாட்டின் கிழக்குப் பகுதி பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி ரஷ்யா அதனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இதன் தொடர்பாக ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. கிரிமியாவைத் தொடர்ந்து டோநெட்ஸ்க், லுகான்ஸ்க் போன்ற பகுதிகளும் ரஷ்யாவுடன் இணையும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றன.எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா பிரிவினைவாதிகளுக்கு ஆயுத உதவிகளை செய்துவருவது அங்கு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் அளவிற்கு நிலமைகளைத் தீவிரமாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று அறிவித்துள்ளன.அதிலும் அமெரிக்க அரசு இந்த முறை குறிப்பாக ரஷ்யாவின் வங்கிகள், ராணுவம் மற்றும் ஆற்றல் துறைகளைக் குறிவைத்து தடைகளை விதித்துள்ளது. இந்த புதிய தடைகள் பனிப்போர் காலத்திற்குப்பிறகு மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்ய உறவை மேலும் கடினப்படுத்துகின்றது.

பிரிவினைவாதிகளுக்கான ஆதரவையோ, ஆயுத சப்ளையையோ நிறுத்த ரஷ்யா மறுத்துள்ளதால் தங்களுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.உக்ரைன் நாட்டின் இறையாண்மையையும், எல்லைபுற ஒருமைப்பாட்டையும் குலைக்கும் செயல்களில் ரஷ்யா ஈடுபடுகின்றது என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகளைத் தாக்கும் இந்தத் தடைகள் குறித்தும், ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை குறித்தும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று அந்நாட்டுத் தொலைக்காட்சியில் உரையாற்றுவார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி