செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!…

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!…

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பிற்கு தடை!… post thumbnail image
பீஜிங்:-உலகெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாமியர்களுக்கான ரமலான் புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் ரமலான் நோன்பு மேற்கொள்ளுவதை சீன அரசு தடை செய்துள்ளது.

இங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு ஏஜென்சிகளின் வலைத்தளங்கள் மூலம் இந்தத் தடை உத்தரவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. அரசு ஊழியர்கள், மாணவர்கள் போன்றோர் நோன்புகளிலும் மற்ற மத நடவடிக்கைகளிலும் பங்கேற்கமுடியாது என்று டர்பான் நகரின் வணிக விவகாரப் பணியகம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் அரசு நிர்வாகம் இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ரமலான் விரதம் இருப்பதற்கு ஒருவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை அனைவருக்கும் நினைவூட்டி வருவதாக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் இணையதளங்கள் அறிவித்து வருகின்றன. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் போன்றவர்களுக்கும் ரமலான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்படுகின்றது என்று அந்தத் தகவல் குறிப்பிடுகின்றது.
இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பிரிவினைவாதம் தோன்றக்கூடும் என்ற அச்சம் காரணமாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியும் சின்ஜியாங் அரசு நிர்வாகமும் பெரிய பிரார்த்தனைக் கூட்டங்களையும் மற்ற மத நிகழ்ச்சிகளையும் தடை செய்வதாகக் கூறப்படுகின்றது.

ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உட்பட தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது என்று மேற்கு சின்ஜியாங்கில் உள்ள காரகஷ் மாவட்ட வானிலைப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.பீஜிங்கில் செயல்பட்டுவரும் பொது பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவு வந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது. கடந்த சில வருடங்களாகவே சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும், பழைமைவாத சீனர்களுக்கும் மோதல்கள் வலுத்துவருகின்றன.கடந்த 2009ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் இவர்களுக்கிடையே நடந்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். எனினும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளை மேலும் இறுக்கும் சீன அரசின் நடவடிக்கைகள் இன்னும் மோதல்களையே அதிகரிக்கும் என்று நாடு கடத்தப்பட்ட உலக உய்குர் தலைமை செய்தித் தொடர்பாளர் டில்சட் ரக்சிட் தெரிவித்தார். உய்குர்களின் மத சுதந்திரத்தை உறுதி செய்து ரமலான் அரசியல் அடக்குமுறையை சீன அரசு நிறுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி