திருவனந்தபுரம்:
மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றியுள்ளது. மொசூல் நகரில் 40 இந்தியர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதே போல் திக்ரித் நகரில் மருத்துவமனை ஒன்றில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக கேரளாவை சேர்நத நர்ஸ்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். இதுவரை 16 இந்தியர்கள் ஈராக்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் இந்தியா திரும்ப விருப்பம் இருந்தும், போர் காரணமாக தாங்கள் குடியிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சிலருக்கு விசா பிரச்னையும் உள்ளது.
இந்நிலையில் ஈராக்கிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் கேரள மாநிலத்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கில் சிக்கி தவிக்கும் கேரளமாநிலத்தவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் நாடு திரும்ப ஆகும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் அந்த செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். இது தொடர்பாக பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி