அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சதாம் உசேனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொலை…!

சதாம் உசேனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொலை…!

சதாம் உசேனுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொலை…! post thumbnail image
பாக்தாத்:- ஈராக்கில் சர்வாதிகார ஆட்சி புரிந்துவந்த சதாம் உசேன் சுன்னி இனத்தவர் ஆவார். கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக்கை சுற்றிவளைத்து சதாமைப் பதவியிலிருந்து இறக்கி அங்கு ஷியா பிரிவு ஆட்சியை ஏற்படுத்தியது..பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சதாம் உசேனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பினை வழங்கியவர் அப்போது நீதிபதியாக இருந்த ரவ்ப் அப்துல் ரஹ்மான் என்பவர் ஆவார். குர்து இனத்தைச் சேர்ந்த இவர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சதாமின் விசாரணையில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு முன்னால் இந்த வழக்கை விசாரித்துவந்த ரஸ்கர் அமினின் கருணைத்தன்மை விமர்சிக்கப்பட்டதால் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அனால் அவருமே ஒருதலைப்பட்சமாக இருந்ததாக குறைகூறப்பட்டார்.1988ஆம் ஆண்டில் ஹலாப்ஜா பகுதியில் சதாம் உசேன் உத்தரவின் கீழ் நடைபெற்ற விஷத் தாக்குதலில் ரஹ்மானின் உறவினர்கள் பலரும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ரஹ்மானுமே சதாமின் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவரது மரண தண்டனைத் தீர்ப்பும் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது..

இதன்பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்து சென்ற ரஹ்மான் அங்கு தஞ்சம் வேண்டி முறையீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது தீவிரவாத இஸ்லாமியப் படைகளான ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஈராக்கில் நடைபெற்றுவரும் ஷியா பிரிவு அரசை எதிர்த்து போரிட்டு பல பகுதிகளை கைப்பற்றி வருகின்றது.

இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மாறு வேடத்தில் பாக்தாதை விட்டு கடந்த 16ஆம் தேதியன்று வெளியேறிய ரஹ்மான் பிடிபட்டு இரண்டு நாட்கள் கழித்து கொல்லப்பட்டதாக சதாம் ஹுசைனின் முக்கிய உதவியாளராக இருந்த இப்ராஹீம் அல் டௌரியின் இணையதளத் தகவல் தெரிவிக்கின்றது.

ஜோர்டானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே தகவலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் ஈராக் அரசு இதுகுறித்து தகவல் எதுவும் வெளியிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி