டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன் படி துவக்க வீரர்களாக உத்தப்பாவும், ரகானேவும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து ரகானே வெளியேற மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். இருவரும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சந்திக்க சிரமப்பட்டனர். இந்த நிலையில் 6வது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.மழை நின்ற பின் ஆட்டத்திற்கான ஓவர்கள் 41 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 8வது ஓவரில் 14 ரன்களை எடுத்திருந்த உத்தப்பா டஸ்கின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராயுடு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் ரெய்னா களமிறங்கினார். அவர் மட்டுமே வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 14வது ஓவரில் புஜாரா டஸ்கின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் ரெய்னா மட்டும் 27 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். கடைசியாக களமிறங்கிய உமேஷ் யாதவ் மட்டும் சற்று ஆறுதல் தரும் வகையில் ஆட்டத்தின் ஒரே ஒரு சிக்சர் அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 25.3 ஓவர்களிலேயே இந்திய அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
106 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும், அனாமுல் ஹக்கும் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில் அவுட்டாகி தமிம் நடையை கட்டினார். 3வது ஓவரில் அனாமல்லும் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மிதுன் அலியும், முஷ்பிக்குர் ரஹிமும் சிறிது நேரம் பொறுமையாக விளையாடினார். எனினும் மிதுன் அலி 26 ரன்களுக்கும், ரஹிம் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் ஸ்டூவர்ட் பின்னி 28 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி